பெரும் சிக்கல்! சீனா போட்ட ஸ்கெட்ச்.. மாலத்தீவுக்குள் சீன ராணுவம்? உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
மாலே: மாலத்தீவுக்கு ராணுவ உதவி அளிக்க சீனா புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு சீனாவுடன் அதீத நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது. மாலத்தீவு - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உள்ள முழு விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள இந்த நாடு.. பூகோள ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் வளைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஒருபக்கம் சீனா முயற்சி செய்து வரும் நிலையில், மாலத்தீவு இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்து வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்சு பதவியேற்ற பிறகு, சீனாவுடன் மிக நெருக்கம் காட்ட தொடங்கியது மாலத்தீவு. இந்த சூழலில் தான், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்டனர்.
மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவி: இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. போதாக்குறைக்கு மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முய்சு உத்தரவிட்டார். இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதனிடையே, மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய ராணுவம் மார்ச் 10 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்ற கெடுவை விதித்து இருக்கும் நிலையில் சீனாவுடன் மாலத்தீவு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவுக்கு சென்ற சீனா அமைச்சர் ஜாங் பகுன், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகம்மது கசன் மயூனை சந்தித்தார்.
இலவசமாக 12 ஆம்புலன்ஸ்: சீனா - மாலத்தீவு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் அமையும் என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், சீனா - மாலத்தீவு இடையே போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் முழு விவரமும் வெளியாகவில்லை. இதற்கிடையே, சீனா மாலத்தீவுக்கு இலவசமாக 12 ஆம்புலன்ஸ்களையும் பரிசாக வழங்கியுள்ளது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்ட நிலையில், தற்போது சீனாவிடம் இருந்து ராணுவ உதவியை பெற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை அனுமதிக்க மறுத்த சீன ஆய்வுக் கப்பலை மாலத்தீவு அண்மையில் அனுமதித்த நிலையில் தற்போது ராணுவ உதவியை பெறவும் ஒப்பந்தம் போட்டு இருப்பது இந்திய பெருங்கடலில் உள்ள புவிசார் அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications