போருக்கு நடுவே.. எகிப்து, கத்தார் எடுத்த சிறப்பான முயற்சி! வயதான 2 இஸ்ரேலிய பெண்களை விடுவித்த ஹமாஸ்
காசா: எகிப்து மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது வயதான 2 இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை விடுவித்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. விடுவிக்கப்பட்ட பெண்கள் சர்வதேச செங்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடமிருந்து தப்பிய யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனத்திற்கு வந்தனர். ஆனால் உலகம் முழுக்க உள்ள யூதர்களின் ஆதரவுக்காக, பிரிட்டன், பாலஸ்தீனத்தை உடைத்து யூதர்களுக்காக இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கியது. இதுதான் பாலஸ்தீன பிரச்னையின் தொடக்கப்புள்ளி. அதுவரை தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டனர். பாலஸ்தீனம் எனும் பெரிய நிலம், காசா எனும் துண்டு நிலமாக சுருக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து 1980களில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உருவாகின. அதில் ஹமாஸும் ஒன்று.

இந்த குழுக்களை காரணம் காட்டி காசா மீது இஸ்ரேலும், பல மேற்கு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் பயங்கரவாத செயல்களில் இறங்கியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 17 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. அதற்கு முன்னதாக 18வது நாளான இன்றும் காசா மீது இஸ்ரேல் கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. தற்போதுவரை பாலஸ்தீனத்தில் 1,873 குழந்தைகள் உட்பட 4,651 பேர் உயிரிழந்துள்ளனர். 14,245 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படி இருக்கையில் இஸ்ரேல் தங்கள் நாட்டின் பணயக்கைதிகளை மீட்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவை சேர்ந்த தாயும், மகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று இஸ்ரேலை சேர்ந்த வயதான பெண் பணயக்கைதிகள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட இருவரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கத்தார் மற்றும் எகிப்து நடத்திய பேச்சுவார்த்தையே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications