நெஞ்சு பதறுதே.. நிலநடுக்க இடிபாட்டில் சிக்கினால் அதிகமாக எத்தனை நாள் உயிரோடு இருக்கலாம்?பகீர் தகவல்
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியோர் உணவு, தண்ணீரின்றி எத்தனை நாள் ஒருவரால் உயிர் வாழ முடியும் என்பது பற்றி நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளில் இன்னும் கூட பல ஆயிரம் பேர் சிக்கி இருக்கின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்த நிலையில் நிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கியனால் நீர், உணவு இன்றி எத்தனை நாள் வரை அதிகபட்சமாக ஒருவரால் உயிரோடு இருக்க முடியும்? என்பது பற்றி நிபுணர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல்படி பார்த்தால் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிர் பலி என்பது இன்னும் கூட அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள தொழில் நகரம் காசியான்டெப். இங்கு கடந்த 6ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சிரியாவிலும் எதிரொலித்தது. இதனால் துருக்கி, சிரியாவில் எல்லையோர நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் ஏராளமான மக்கள் இடுபாடுகளுக்கு சிக்கினர்.
மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்ற நிலையிலேயே அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அன்று மாலையில் 2வதாக 7.5 ரிக்டரிலும், அதன்பிறகு 3வதாக ரிக்டரில் 6 என்ற அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் மேலும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பல ஆயிரம் பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் 6வது நாள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை என்பது 24 ஆயிரத்தை எட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம், படுகாயமடைந்துள்னளர். அதோடு இன்னும் ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்கும் என அஞ்சப்பபடுகிறது.

இடுபாடுகளில் எத்தனை நாள் வாழலாம்?
இந்நிலையில் தான் நிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களால் எவ்வளவு நாள் உயிருடன் வாழ முடியும்? என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வல்லுனர்கள், பேரிடர் மீட்பு படையின் டாக்டர்கள் கூறுகையில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இவ்வளவு நாள் தான் உயிருடன் இருக்க முடியும் என்பதை சரியாக நம்மால் கூற முடியாது. ஏனென்றால் இடிபாடுகளில் சிக்கியவர்களின் காயங்கள், மனதைரியம், அவர்களுக்கு சுவாசிக்க கிடைக்கும் காற்று ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். காயத்தின் தன்மை அதிகரித்தால் அது உயிர்வாழும் நாட்களை குறைக்க கூடும். பெரும்பாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் ஒருவாரம் வரை உயிர் வாழ்வார்கள். மனதைரியம், உடல் வலிமை, காயங்கள் இன்றி அவர்களின் வாழ்நாள் என்பது கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் கூட அதிகரிக்கும் என்கின்றனர்.

5 முதல் 7 நாட்கள்
இதுபற்றி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் அரசு மருத்துவமனையின் அவசர மற்றும் பேரிடர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜரோன் லீ கூறுகையில், ‛‛பொதுவாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் 5 முதல் 7 நாட்கள் வரை உயிர் பிழைத்திருக்க முடியும். அதன்பிறகு அவர்கள் உயிர் பிழைத்து இருப்பது என்பது சிரமமானது. இதில் ஒரு சிலர் விதிவிலக்காக அரிதாக உயிர் பிழைக்கலாம். ஏனென்றால் இதற்கு முன்பு பல இடங்களில் 7 நாட்களை கடந்தும் உயிருடன் வந்தவர்கள் நிறையபேர் உள்ளனர். இருப்பினும் இது அரிதானது. இதனால் அதற்குள் மீட்பு படையினர் முடிந்தவரை முழுதிறமையையும் வெளிக்காட்டி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்'' என்றார்.

‛கோல்டன் ஹவர்ஸ்’ முக்கியம்
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவ பள்ளியின் அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் ஜார்ஜ் சியாம்பாஸ் கூறுகையில், ‛‛எந்தவொரு பேரிடர் ஏற்பட்டாலும் அதில் சிக்கியவர்களை மீட்பதில் முதல் ஒருமணிநேரம் மிகவும் முக்கியமானதாகும். இதுதான் கோல்டன் ஹவர்ஸ் என சொல்வார்கள். அதன்பிறகு நேரம் ஆக ஆக உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை பொறுத்து மனிதர்கள் உயிர் வாழும் நேரம் குறைந்து கொண்டே செல்லும். இதில் காயத்தின் தன்மை, வயது, உடல் வலிமை, மனவலிமை உள்ளிட்ட காரணிகள் முக்கியமானவை'' என்றார்.

15 நாளுக்கு பின் உயிர் பிழைத்த சிறுமி
இதுபற்றி சான்பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அவசரகால மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர் கோல்வெல் கூறுகையில், ‛‛இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கு சுவாசிக்க தேவையான காற்று தேவை. அதிர்ஷ்டம் இருந்தால் இது நிச்சயம் கிடைக்கும். 2011 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் வீட்டில் சிக்கிய ஒரு இளைஞரும், 80 வயது பாட்டியும் 9 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த ஆண்டு போர்ட்-ஆவ்-பிரின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கட்ட இடிபாடுகளில் சிக்கிய 16 வயது சிறுமி 15 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்'' என நம்பிக்கையான வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.

பலி அதிகரிக்கலாம் என அச்சம்
இருப்பினும் தற்போதைய சூழலில் கூட பல ஆயிரம் பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அங்கு தற்போதைய சூழலில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது மீட்பு பணிக்கு பெரும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் மக்களின் உயிர் காக்கும் முயற்சியில் பல நாட்டு வீரர்கள், பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி துரிதமாக நடந்தாலும் கூட இடிபாடுகளில் சிக்கியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இன்னும் கூட பலி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications