மண்ணை கவ்வியிருக்கும்.. ஆனால் அதைவிட பெரிய பாதிப்பு! போரால் பாக். எதிர்கொள்ளும் சிக்கல் இதுதான்
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்த உரசல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இது போராக வெடித்திருந்தால் பாகிஸ்தான் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு கடந்த 2019ல் இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு என சுமார் ரூ.80,000 கோடியை செலவழித்திருக்கிறது. இந்த காசை வைத்திருந்தால் அந்நாட்டில் 500 கி.மீ நீளத்திற்கு ரோடு போட்டிருக்க முடியும். அல்லது குறைந்தது 300 கிராமங்களில் மகப்பேறு மற்றும் தடுப்பூசி வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கியிருக்க முடியும்.

ஆக போர் தொடங்கியிருந்தால் ஆயுதங்களுக்கு என அதிக தொகையை அந்நாடு செலவு செய்ய வேண்டி இருக்கும். தற்போது அந்நாட்டின் ஜிடிபியில் 3.5% ராணுவத்திற்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அதிகரித்திருக்கும்.
1. போர் தொடர்ந்தால், ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியின் கடன்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. அப்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பொருளாதார தடையை விதித்திருந்தது. இப்போது ஐஎம்எஃப் சுமார் 7 பில்லியன் வரை கடன் வழங்கி வருகிறது. முதற்கட்டமாக 1 பில்லியன் விடுவிக்கப்பட்டிருக்கிறது. போர் தொடங்கினால் இந்த நிதி உதவி அப்படியே நின்றுபோய்விடும்.
2. வெளிநாட்டு முதலீடுகள் போர் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் வளர்ந்து வரக்கூடிய நாடு. எனவே அந்நிய முதலீடுகள் அவசியம். ஆனால் போரில் பாக் பங்கேற்றால் இந்த முதலீடுகள் வராது. எனவே வேலை வாய்ப்பு குறைவு, தொழில் வளர்ச்சி மந்தம், பொருளாதார சரிவு போன்றவை ஏற்படும். 2022ம் ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தானின் அந்நிய முதலீடு வெறும் 1.5 பில்லியன்தான். சீனா, ஐக்கிய அரபு நாடு ஆகியவைதான் இந்த முதலீட்டை செய்திருக்கின்றன. போர் வந்தால் அதுவும் நின்றுவிடும்.
3. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும், பணவீக்கமும் போருடன் பிறந்தவை. இப்போதைய நிலைமையில் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு அதள பாதாளத்தில்தான் இருக்கிறது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக பாக் ரூபாய் 300 என்கிற அளவில் இருக்கிறது. இதுவே போர் வந்தால் 400-450 வரை தொடலாம். பணவீக்கம் ஏற்கனவே 30%+ உள்ள நிலையில், உணவு மற்றும் எரிபொருள் விலையை போர் அதிகரிக்கும். மக்கள் பஞ்சத்தில் கூட பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
4. ஏற்றுமதி மற்றும் தொழில் வளர்ச்சியில் போர் தாக்கத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தானிலிருந்து துணியும், விவசாய பொருட்களும்தான் ஏற்றுமதியாகிறது. அதிக அளவில் இந்தியா இதை வாங்குகிறது. போர் வந்தால் இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து எந்த பொருளையும் வாங்காது. இதனால் அந்நாட்டுக்கு 2-3 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும். போரில் கராச்சி, லாகூர் போன்ற தொழில்துறை மையங்கள் தாக்கப்பட்டால் அது அந்நாட்டு வளர்ச்சியில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. உள்நாட்டு கிளர்ச்சியும் போரினால் ஏற்படும் மற்றொரு பாதிப்பாகும். போர் தொடங்கினால் அது உடனே முடியாது. எனவே, அரசியல் அயர்ச்சி அந்நாட்டில் உருவாகும். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தீவிரவாத குழுக்கள் நாசகர வேலையை தொடங்குவார்கள். எனவே அரசியல் கிளர்ச்சி ஏற்படும். உள்நாட்டு கலவரங்கள் வெடிக்கும். நிலையற்ற அரசு அனைத்து விதத்திலும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். இது எல்லாவற்றையும் விட, நிலப்பரப்பை இழக்கும் அபாயமும் ஏற்படும்.
நல்ல வேளை இந்த சிக்கல்களை உருவாக்கும் போர் தற்போது வெடிக்கவில்லை. எனவே பாகிஸ்தான் தப்பித்துக்கொண்டது.












Click it and Unblock the Notifications