வாரத்திற்கு 4 நாட்கள்தான் வேலை.. கொட்டும் லாபம்! ஜெர்மனியில் நடந்த அதிசயம்.. இந்தியாவில் சாத்தியமா?
பெர்லின்: இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக 10 மணி நேரம் வரை வேலை செய்கிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஜெர்மனியில் உள்ள பல நிறுவனங்கள், முழு சம்பளத்துடன் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, என்கிற நடைமுறையை தற்போது நோக்கி நகர தொடங்கியுள்ளன.
ஏன் ஜெர்மனி நிறுவனங்கள் இந்த நடைமுறையை நோக்கி நகர்ந்தன? இதற்கான காரணம் என்ன? வெறுமென சோதனை முயற்சியாக முதலில் தொடங்கப்பட்டது இப்போது நிரந்தரமாக மாறியிருக்கிறதே எப்படி? இது தொடர்பாகத்தான் இந்த செய்தி விவரிக்கிறது.

கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மனி நாட்டில் உள்ள 45 நிறுவனங்கள், 'ஃபோர் டே வீக் குளோபலின்' அமைப்பின் வழிகாட்டுதலின்படி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை என்கிற நடைமுறையை கொண்டு வந்தன. டெக், நிதி மற்றும் உற்பத்தி என பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்றிருந்தன. இப்போது இதில் 73% நிறுவனங்கள், இனி காலவரையின்றி இந்த நடைமுறையை பின்பற்றப்போவதாக கூறியிருக்கின்றன. அப்படி என்னதான் நடந்தது இந்த முயற்சியில்?
முயற்சி தொடங்கியபோது உற்பத்தி குறையும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை எட்ட முடியாது என்றும் முதலாளிகள் அச்சமடைந்திருந்தனர். அவ்வளவு ஏன்? தொழிலாளர்களே கூட இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று கூறியிருந்தனர். ஆனால் 6 மாதங்களுக்கு பிறகு வெளியான முடிவு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நிறுவனங்களும் 100-80-100 என்கிற நடைமுறையை பின்பற்றியிருந்தன. அதாவது உற்பத்தி திறன் 100%, உழைப்பு 80%, ஊதியம் 100% என்பதுதான் இதற்கு அர்த்தம்.
இந்த முயற்சி முடியுவுற்றபோது அதிசயம் நடந்திருந்தது. முதல் அதிசயம் தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். கார்ப்பரேட் என்றாலே உயிரை எடுக்கும் வேலை சூழல் இருக்கும். ஆனால் இந்த முயற்சியில் குடும்பத்துடன் செலவிட அதிக நேரம் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்திருக்கிறார்கள். வாசித்திருக்கிறார்கள், மீண்டும் வேலைக்கு வரும்போது புதிய உற்சாகத்துடன், ஐடியாக்களுடன் வந்திருக்கிறார்கள். இதன் விளைவு, உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. இதுதான் இரண்டாவது அதிசயம்.
வாரத்தில் 6 நாட்கள் வேலை வாங்கும்போது எவ்வளவு உற்பத்தி கிடைத்ததோ, அதை விட அதிகமான உற்பத்தி இந்த 4 நாட்கள் வேலையின் போது கிடைத்திருக்கிறது. நிறுவனங்கள் தங்கள் மீட்டிங் நேரத்தை பாதியாக குறைத்தன. ஐடியா என்ன? இன்று என்ன செய்யப்போகிறோம்? என்பதுதான் டார்கெட். தினமும் இது பேசப்படும். அதன்படி வேலை நடக்கும். வேலையில் தொழிலாளர்களின் முழு திறனும் எதிரொலித்தது. முன்பு மீட்டிங் என்கிற பெயரில் நடந்த அறுவை எல்லாம் இப்போது இல்லை.
6 மாதங்கள் முடிந்த பின்னரும் 4 நாட்கள் வேலை என்கிற நடைமுறையை காலவரையின்றி தொடர்வதாக 73% நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இதேபோன்ற முயற்சியை உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் சோதித்து பார்த்திருக்கின்றன. இதில் 210 நிறுவனங்கள் இன்னமும் இந்த நடைமுறையை இன்னமும் தொடர்கிறது. ஸ்பெயின் , போர்ச்சுகல் , அயர்லாந்து , தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்த நடைமுறையை தொடர்கின்றன.
ஆனால் இந்த நடைமுறை எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இதையும் ஜெர்மன் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான சப்ளையை எதிர்கொள்ளும் நிறுவனங்களால் இதை சாத்தியப்படுத்த முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும், வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது தொழிலாளர்களுக்கு மன நிம்மதியையும், முதலாளிகளுக்கு லாபத்தையும் ஏற்படுத்தும் பார்முலா என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications