வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்த இந்திய அமெரிக்க சிஇஓ!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐடி ஸ்டாபிங் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமன்சு பாட்டியா மீது, வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து அவர் கொடுமைப்படுத்தியதாக அந்த நாட்டு தொழிலாளர் நல அமைச்சகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. மேலும் வேலைக்காரப் பெண்ணுக்கு போதிய சம்பளத்தை அவர் தரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகளுக்குப் புறம்பாக தினசரி பல மணி நேரம் அப்பெண்ணை பாட்டியா குடும்பத்தினர் வேலை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வந்துள்ள புகாரை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஹிமன்சு பாட்டியா
அமெரி்காவின் மிசவவுரி மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டது ரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்தியாவிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. இதன் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து வருபவர் பாட்டியா. இவரது பூர்வீகம் கொல்கத்தா ஆகும்.

வேலைக்காரப் பெண்ணுக்கு சித்திரவதை
பாட்டியா மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. தனது வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக பணிபுரிந்து வந்தவரை கொடுமைப்படுத்தினார் பாட்டியா என்பதுதான் அந்தப் புகார். அப்பெண்ணை விதிமுறைகளுக்குப் புறம்பாக பாட்டியா குடும்பத்தினர் நடத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

நாய்களுடன் படுக்க வைத்தார்
வேலைக்காரப் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டார் பாட்டியா என்று கூறப்பட்டுள்ளது. அப்பெண்ணை நாய்களுடன் படுக்குமாறு கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் வேலைக்காரப் பெண்ணை தினசரி 15 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

400 டாலர் சம்பளம்
அப்பெண்ணுக்கு 400 டாலர் மாதச் சம்பளமாக கொடுத்துள்ளார் பாட்டியா. மேலும் உணவும் வழங்கியுள்ளார். ஆனால் சம்பளம், விதிமுறைப்படி தரவில்லையாம். மாறாக மிக மிகக் குறைந்த சம்பளமே கொடுத்துள்ளார் பாட்டியா என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் வழக்கு
இந்தப் புகார்களின் பேரில் கலிபோர்னியாவில் உள்ள மத்திய மாவட்ட கோர்ட்டில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை செயலாளர் தாமஸ் பெரஸ் பாட்டியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் வேலைக்காரப் பெண் ஷீலா நிங்க்வாலை மிகவும் மோசமாகவும், சித்திரவதைப்படுத்தியும் பாட்டியா நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார் பெரஸ்.

கார் ஷெட்டில்தான் தூக்கம்
ஷீலா தூங்குவதற்கு வீட்டில் வசதி ஏற்படுத்தித் தரவில்லை பாட்டியா. மாறாக கார் ஷெட்டில் படுக்கச் சொல்லியுள்ளார். அங்குதான் அவரது வீட்டு நாய்களும் படுத்திருக்கும். அவருக்கு உடம்பு சரியில்லாவிட்டால் உரிய முறையில் கவனித்துக் கொள்வதும் இல்லை. சாப்பாடு கூட தராமல் பல நாட்கள் தூங்க வைத்துள்ளார் பாட்டியா.

பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டார்
மேலும் ஷீலாவின் பாஸ்போர்ட்டையும் தான் பறிமுதல் செய்து வைத்துள்ளார். வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் ஷீலாவை அவர் கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறை போல வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளார் ஷீலா என்று பாட்டியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications