பாகிஸ்தானின் போலாரி விமான தளத்தை தகர்த்த இந்தியா! செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் பல்வேறு விமான தளங்கள் தாக்கப்பட்டன. அதில், போலாரியும் ஒன்று. இந்த தளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான சேட்டிலைட் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மற்ற அனைத்து விமான தளங்களை போலவே போலாரியும் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமானது. இதில் 4 மேற்கத்திய போர் விமானங்கள் இருந்திருக்கின்றன. இந்த தாக்குதல் மூலம், இந்திய ராணுவத்தின் வலிமையை பாக். நன்கு உணர்ந்துக்கொண்டிருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

போலாரி விமான தளம் கராச்சியிலிருந்து 150 கி.மீ தொலைவில் இருக்கிறது. இருப்பினும் இந்தியா இந்த தளத்தை குறிவைத்து சரியாக தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் போலாரி விமான தளத்தின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்திருக்கிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அம்சம் தோல்வியடைந்திருப்பதையும் இந்த தாக்குதல் உறுதி செய்திருக்கிறது. பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் வரும். அங்கு 4 பெரிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல அமெரிக்கா மற்றும் சீனாவின் ரேடார்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. இதையெல்லாம் மீறிதான் பிரமோஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதல் நடந்த அடுத்த நாள், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வர், 6 பாகிஸ்தான் விமானப்படை ஊழியர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு இந்த விமானப்படை தளம் பயன்பாட்டுக்கு வந்தது. அந்நாட்டின் மிகவும் மேம்பட்ட முக்கிய செயல்பாட்டு தளங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. பாகிஸ்தான் விமானப்படையின் 19வது படைப்பிரிவு இங்குதான் செயல்படுகிறது. அதே நேரம், புதிய விமானங்களை விமானிகளுக்கு பயிற்சியளிக்கும் நடைமுறையும் இங்குதான் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இங்கு அமெரிக்காவின் F-16A/B Block 15 ரக போர் விமானம் 4 எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும். தாக்குதல் நடத்தபோதும் அந்த விமானங்கள் அங்குதான் இருந்தன. எனவே தாக்குதலில் அது சேதமடைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர 200 AEW&C என்கிற சீன வான்வழி முன்னெச்சரிக்கை விமானம் ஒன்றும் அங்கிருந்திருக்கிறது. தாக்குதலுக்கு பிறகு இதை எதையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு அந்நாட்டு விமானப்படை தள்ளப்பட்டது.
இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறி வைக்கப்பட்டன. சர்வதேச எல்லையை தாண்டிய தாக்குதல் இது என்பதால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கையாக ஏறதத்தாழ 6 விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications