வரியால் வந்த வினை.. ஜப்பான் பிரதமரின் பதவிக்கு வேட்டு வைத்த டிரம்ப்! தேர்தலில் டிவிஸ்ட்
டோக்கியோ: ஜப்பானில் தற்போது விலைவாசி மற்றும் அமெரிக்காவின் வரி உயர்வு உள்ளிட்டவை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்ற மேல் சபைக்கு நடக்கும் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெரும்பான்மையை தக்கவைப்பது கஷ்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்காவின் வரிகள் போன்ற காரணிகளால் ஜப்பான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு, நாளை (ஜூலை 20) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மேல்சபை தேர்தல் சவாலாக இருக்கும். தோல்வியுற்றால் அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் மோசமடைய கூடும்.

தேர்தல் முடிவுகள்: அரசியல் தாக்கம் மற்றும் கூட்டணி நிலை
தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத பட்சத்தில், உடனடியாக அரசாங்க மாற்றம் ஏற்படாது. ஆயினும், இது பிரதமர் இஷிபாவின் எதிர்காலம் மற்றும் ஜப்பானின் பாதையை கேள்விக்குறியாக்கும். கடந்த அக்டோபரில் நடந்த நாடாளுமன்ற கீழ் சபை தேர்தலில், தற்போது ஆட்சியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாகும். இதனால் வாக்காளர்கள் மத்தியில் பிரதமர் இஷிபா மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. கீழ் சபை தோல்வி காரணமாக சட்டங்களை இயற்றுவதற்கு ஆளும் கட்சியிடம் போதிய பலம் இல்லை. எனவே எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவை பிரதமர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை.
எனவே ஊதிய உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயற்றப்பட வேண்டிய மசோதாக்கள் இயற்றப்படாமல் இருக்கிறது. ஆளும் லிபரல் கட்சிக்கு எதிர்ப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாட்டினரை எதிர்க்கும் புதிய கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த கட்சிகள் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிராக செயல்படுகின்றன.
மேல்சபையில் உள்ள 248 இடங்களில் பாதி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான கோமெய்டோவும் இணைந்து 50 இடங்களை வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடாத 75 இடங்களை சேர்த்துக்கொண்டால், கூட்டணிக்கு 141 இடங்கள் கிடைக்கும். ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறினால், இஷிபாவை பதவி விலக வேண்டி வரும். இதனால் ஆட்சித் தலைமை நிலையற்றதாக மாறும்.
இஷிபாவின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி தொடர்ந்தாலும், ஆதரவு குறைவாகவே இருக்கும் என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேல் சபையில் வெற்றி பெற்றாலும் மசோதாக்களை நிறைவேற்ற கீழ் அவையின் ஒப்புதல் தேவை. இதற்கு எதிர்க்கட்சிகள் மனசு வைக்க வேண்டும்.
ஜப்பானில் அரிசி தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டை விட அரிசியின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த இஷிபா போராடி வருகிறார். இதற்கிடையில் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி குறைவாக இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது இஷிபாவுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு எந்த சமரசமும் செய்ய இஷிபா விரும்பவில்லை. எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினம் என்பதால், தேர்தலுக்குப் பிறகும் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அரிசி பிரச்சனை காரணமாக, இஷிபா தனது வேளாண் துறை அமைச்சரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications