வங்கதேசத்தில் பரபரப்பு.. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு
டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜையின் நிகழ்ச்சியின் போது குரான் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டுள்ளது. அதில் 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 20 முதல் 29 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கொமிலா என்ற நகரில் நானுவார் தீகி ஏரி அருகே நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைச் சிலர் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.
இதையடுத்து கொமிலா பகுதியில் வைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் மளமளவென நாடு முழுவதும் பரவியது.

துர்கா பூஜை வன்முறை
மேலும், சில இடங்களில் இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். வன்முறை மேலும் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கு அந்நாட்டின் சிறுபான்மை துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

கிராமத்தில் தீ வைப்பு
நேற்றிரவு தலைநகர் டாக்காவிலிருந்து 255 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிராமத்தில் இந்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாக bdnews24.com நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரின் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ வைத்தனர்.

29 வீடுகளுக்கு தீ
இந்த விபத்தில் குறைந்தபட்சம் 20 முதல் 29 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு 8:45 மணி அளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. அந்த கிராமம் முழுக்க பதற்றமான சூழலே இருக்கிறது. இதனால் நிலைமை மோசமாவதைத் தடுக்க அங்குப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

என்ன காரணம்
இஸ்லாமியப் புனித நூல் அவமதிக்கப்பட்டதாகப் பரவிய தகவலைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி இரு வேறு சமூகத்தினர் மத்தியில் வன்முறையை உண்டாகியதாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்
வங்கதேசத்தில் கடந்த ஜனவரி 2013இல் தொடங்கி தற்போது வரை மட்டும் சிறுபான்மை இந்து சமூகத்தின் மீது 3,679 தாக்குதல்கள் நடந்துள்ளதாக bdnews24.com நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 559 வீடுகள் மற்றும் 442 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதே காலத்தில் இந்து கோவில்கள், சிலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது குறைந்தது 1,678 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் இந்து சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்துள்ளனர், மேலும் 862 பேர் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications