உலக நாடுகளை அலறவிடும் காலிஸ்தான் விவகாரம்.. கனடா, அமெரிக்கா அடுத்து நியூசிலாந்தில்.. 3 பேருக்கு சிறை
ஆக்லாந்து: ரேடியோ ஜாக்கி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 3 காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் குற்றவாளிகள் என்று நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த சில காலமாகவே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்த செய்திகள் உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பல மாதங்களாகவே பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியத் தூதரகம், இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையே கனடாவில் ஹர்தீப் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டார். அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பினார். மேலும், அமெரிக்காவும் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொலை செய்ய முயன்றாக இந்தியர் ஒருவரைக் கைது செய்து பகீர் கிளப்பியது.
காலிஸ்தான்: இப்படிக் கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் ரேடியோ ஜாக்கி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 3 காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் குற்றவாளிகள் என்று நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காலிஸ்தான் சித்தாந்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்த ஆக்லாந்தைச் சேர்ந்த வானொலி தொகுப்பாளர் ஹர்னெக் சிங் என்பவரை இந்த 3 பேர் இணைந்து கொலை செய்ய முயன்றுள்ளனர். ஹர்னெக் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மூன்று பேரும் இப்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
யார் அந்த 3 பேர்: 27 வயதான சர்வ்ஜீத் சித்து என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.. அதேபோல ஆக்லாந்தில் வசிக்கும் 48 வயதான மற்றொரு நபரும் ஹர்னெக் சிங் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர் தான இந்தத் தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட் என்று போலீசார் கூறுகின்றனர். இவர்கள் இருவரைத் தவிர 44 வயதான சுக்ப்ரீத் சிங் என்பவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன
விசாரணையின் போது, நீதிபதி மார்க் வூல்ஃபோர்ட் சமூகப் பாதுகாப்பின் அவசியத்தையும், மத வெறிக்கு எதிராக வலுவான தடுப்பையும் வலியுறுத்தினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி வூல்ஃபோர்ட் கூறுகையில் "மத வெறியின் அனைத்து அடையாளங்களையும் இந்தத் தாக்குதல் கொண்டு இருக்கிறது. இதைச் சாதாரண அடிதடி வழக்காகக் கருத முடியாது. மேலும் வன்முறையில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க முக்கியத்துவம் தர வேண்டும்" என்றார்.
இந்தத் தாக்குதலில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட அந்த 48 வயதான நபருக்கு 13.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சர்வ்ஜீத் சித்து என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 44 வயதான சுக்ப்ரீத் சிங்கை 6 மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
என்ன நடந்தது: கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஹர்னேக் சிங்கை மூன்று கார்களில் பாலோ செய்து வந்த சிலர் அவரை திடீரென தாக்கியுள்ளனர். 40க்கும் மேற்பட்ட முறை அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்கவே 350க்கும் மேற்பட்ட தையல்கள் மற்றும் பல அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. தாக்குதல் நடக்கும் போது கடைசி நிமிடத்தில் அவர் காருக்குள் சென்று லாக் செய்து கொண்டார். இதனால் தான் அவர் உயிர் பிழைக்க முடிந்தது.












Click it and Unblock the Notifications