அடுத்த இடி.. சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கானுக்கும், 3வது மனைவிக்கும் தலா 7 ஆண்டு சிறை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது 3வது மனைவி புஷ்ரா பிவீயும் செய்து கொண்ட திருமணம் செல்லாது. அந்த திருமணம் சட்டவிரோதம் எனக்கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார்.

தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களை வென்றது. இதையடுத்து இம்ரான் கான் கூட்டணி ஆட்சியை பாகிஸ்தானில் அமைத்து பிரதமராக பொறுப்பேற்றார். அதன்பிறகு கூட்டணியில் இருந்து கட்சியினர் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றன.
இதையடுத்து 2022ல் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றங்களில் அவர் மீதான வழக்குகளின் விசாரணை தீவிரமானது. பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் முறைகேடு செய்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது 3வது மனைவி புஷ்ரா பீபி (வயது 49) ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் தனது முதல் ஜெமிமா கோல்ட்சுமித் மற்றும் 2வது மனைவி ரேஹம் கான் ஆகியோரை விவாகரத்து செய்த நிலையில் புஷ்ரா பீபியை 3வதாக கடந்த 2018ல் கரம் பிடித்தார். புஷ்ரா பீபியை, இம்ரான் கான் ஆன்மிக குருவாக முதலில் ஏற்ற நிலையில் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் இருவருக்கும் தற்போது 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தவர் புஷ்ரா பீபிவின் முன்னாள் கணவர் கவார் பரித் மேனகா ஆவார். அவர் தனது மனுவில், ‛‛இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் என்னை ஏமாற்றிவிட்டனர். என் திருமண வாழ்க்கையை இருவரும் சீரழித்துவிட்டனர். இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தனர். இஸ்லாமிய திருமண சட்டத்தை மீறி இருவரும் கரம் பிடித்துள்ளனர். திருமண முறிவுக்கு இடையேயான காத்திருப்பு காலத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இவர்கள் மீது பாகிஸ்தான் தண்டனை சட்டப்பிரிவு 34 (பொதுநோக்கத்துடன் குற்றம் புரிதல்), 496 (சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட திருமண மோசடி) மற்றும் 496 (திருமணம் செய்யாமல் உறவு வைத்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இவர்கள் 2 பேரும் குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். தீர்ப்பின்போது அவர்கள் நீதிமன்ற அறையில் இருந்தனர். இந்த தீர்ப்பை கேட்டு இம்ரான் கான்-புஷ்ரா பீபி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது இம்ரான் கானுக்கு 71 வயது ஆகிறது. கடந்த 2022ல் அவர் பிரதமர் பதவியை விட்டு விலகியது முதல் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட 3வது வழக்கு இதுவாகும். பிப்ரவரி 8 ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இம்ரான் கான் போட்டியிட முடியாத நிலையில் அவருக்கு வழங்கப்படும் இந்த தண்டனை என்பது தேர்தலில் அவரது கட்சிக்கு பின்னடைவை வழங்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications