ஆபரேஷன் சிந்தூரில் வாங்கிய அடி! பாகிஸ்தான் ராணுவத்தில் ”ஏவுகணை படை” தனிப் பிரிவை உருவாக்கும் ஷெபாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவை சமாளிக்க முடியாமல் திண்டாடிய பாகிஸ்தான், தற்போது தனது படைத்திறனை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தனது ராணுவத்தில் "ஏவுகணை படை" (New Army Rocket Force) என்ற தனி பிரிவை பாகிஸ்தான் உருவாக்க இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று அறிவித்துள்ளார்.
பஹல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா முன்னெடுத்த இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் சுக்கு நூறாக உடைந்தன.

ஆபரேஷன் சிந்தூரில் வாங்கிய அடி
இதனால், அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதலை முயற்சித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து வந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே தாக்கி அழித்தது. பாகிஸ்தான் விமானப்படை தளத்திலும் இந்தியா அதிரடியாக அட்டாக் செய்தது.
இதில் பாகிஸ்தானுடைய போர் விமானங்களும் பலத்த சேதம் அடைந்தன. ஆபரேஷன் சிந்தூர் பதிலடியால் நிலை குலைந்த பாகிஸ்தான், இந்தியாவிடம் உடனடியாக சண்டை நிறுத்தம் கேட்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் பதிலடி நடவடிக்கையால் விழுந்த அடியை மறக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான், ராணுவத்தில் புதிய பிரிவை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் ஏவுகணை படை
ஏவுகணைகளின் திறன்களை கண்காணிப்பதற்காக ராணுவத்தில் 'ஏவுகணை படை' என்ற தனிப் பிரிவை உருவாக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளுக்காக தனி பிரிவு ஏற்கனவே சீனாவிடம் உள்ளது. சீனா மக்கள் ராணுவத்தில் உள்ளதை காப்பியடித்து பாகிஸ்தானும் தங்கள் ராணுவத்தில் தற்போது தனி பிரிவை உருவாக்கியிருக்கிறது.
சீன ராணுவத்தை மாதிரியாக கொண்டு பாகிஸ்தான் உருவாக்கியிருக்க கூடிய இந்த படைப்பிரிவு இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலின் போது இரு நாடுகளும் டிரோன்கள், ஏவுகணைகளை பயன்படுத்தின. இந்தியா பிரமோஸ், ஆகாஸ் போன்ற ஏவுகணைகளையும் பாகிஸ்தான் சீனாவிடம் வாங்கிய பிஎல்-15 ரக ஏவுகணையையும் பயன்படுத்தியது.
இந்தியாவை மனதில் வைத்தே
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டன. இந்த சூழலில்தான், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், ராணுவத்தில் ராக்கெட் ஃபோர்ஸ் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். எனினும், இது குறித்து வேறு எந்த விரிவான தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய படையில் ஒரு பிரத்யேக கட்டளைப் பிரிவு இருக்கும். போர் நடைபெற்றால், ஏவுகணைகளைக் கையாள்வதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பிரேத்யகமான கமாண்ட் ஆக இது செயல்படும். இந்தியாவை மனதில் வைத்தே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
பஹல்காம் தாக்குதல்
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்தே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எடுக்கப்பட்டது. மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருநாடுகளுக்கும் ஏவுகணைகள், டிரோன்களை பயன்படுத்தி மோதிக்கொண்டன. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு சில இழப்புகள் ஏற்பட்ட போதிலும் பாகிஸ்தான் பலத்த அடியை வாங்கியது.












Click it and Unblock the Notifications