நடுவானில் விமானத்தில் பாய்ந்த புல்லட்.. டக்குனு சுருண்டு விழுந்த பயணி! என்ன நடந்தது தெரியுமா
மியான்மர்: மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு மிகவும் வினோதமான முறையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக விமான போக்குவரத்து உள்ளது. விமான விபத்துகள் என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது.
இந்தச் சூழலில் மியான்மாரில் இளைஞர் ஒருவருக்கு மிகவும் வினோதமான முறையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ புரட்சி
மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி அங்கிருந்த மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். பல மாதங்களாக அங்கு ராணுவ ஆட்சியை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தச் சூழலில் தான் அங்கு இந்த வினோத சம்பவம் நடந்து உள்ளது.

விமானம்
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கம் போலப் பயணிகளை ஏற்றிக் கொண்டு மியான்மர் வான்வழியில் சென்று கொண்டு இருந்தது. அந்த விமானம் 3,500 அடி உயரத்தில் சென்று கொண்டு இருந்தது. பொதுவாக விமானம் இதை விடப் பல ஆயிரம் அடி உயரத்தில் தான் பறக்கும். ஆனால் விமானம் தரையிறங்க வேண்டிய ஏர்போர்டில் இருந்து நான்கு மைல் தொலைவில் வந்து இருந்தது.

காயம்
இதனால் மெல்ல விமானம் உயரத்தைக் குறைத்துக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் அதில் பயணித்த பயணி ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உள்ளது. நடுவானில் இந்தச் சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் பயணிகளில் யாராவது துப்பாக்கியை மறைத்து வந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டாரா என்று சோதித்து உள்ளனர்.

என்ன நடந்தது
இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் விமானத்தைச் சோதனை செய்து பார்த்த போது தான் தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டு விமானத்தைத் தாக்கியதை அவர்கள் கண்டுபிடித்தனர். விமானத்தைத் துளைத்துக் கொண்டு அந்த குண்டு பயணியைத் தாக்கி உள்ளது. ஏர்போர்ட் அருகிலேயே இருந்ததால் நல்வாய்ப்பாக சில நிமிடங்களிலேயே விமானம் தரையிறங்கியது. இதையடுத்து அவர் உடனடியாக லோகாவ்-இல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரத்து
நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து லோகாவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் அலுவலகம், அந்நகருக்கான அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குற்றச்சாட்டு
மியான்மர் ராணுவ அரசு கயா மாநிலத்தில் உள்ள கிளர்ச்சிப் படைகளே பயணிகள் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக மியான்மரின் ஆளும் ராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன், "அரசுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாதிகள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர். பயணிகள் விமானத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சட்டவிரோதம். அதை ஏற்க முடியாது" என்றார்.

மறுப்பு
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைக் கிளர்ச்சியா படை திட்டவட்டமாக மறுத்து உள்ளது. தங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கிளர்ச்சி படை தெரிவித்து உள்ளது. கடந்த 2021இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதலே அங்கு கயா ராணுவத்திற்கும் உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
