ஈரான் சண்டையில் ராணுவ வீரர்கள் பலி.. விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா! இழப்பு இதுதான்!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். எவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 5 பேர் கடுமையாகக் காயமடைந்ததாகவும் பென்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமெனி மரணமடைந்தார். இதை தொடர்ந்து ஈரான் நடத்திய தாக்குதலில் இன்று முதன்முறையாக அமெரிக்கப் படையினர் உயிரிழந்தனர். அச்சுறுத்தல் விடுத்த டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியது.
பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், “ஆபரேஷன் எபிக் ஃபியூரி நடவடிக்கையின் ஒரு பகுதியாக 3 அமெரிக்கப் படையினர் களத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். பலருக்குச் சிறிய குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன, பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, தங்கள் தாக்குதலில் அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலை குறி வைத்ததாகக் கூறியது. ஆனால், பென்டகன் இதை முற்றிலும் மறுத்து, ஏவுகணைகள் கப்பலுக்கு அருகில்கூட வரவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இன்று தங்கள் தாக்குதலை தாக்குதலை மேற்கொண்டதாக புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்தது. ரியாத், துபாய், அபுதாபி, தோஹா, மனாமா, ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய மத்திய கிழக்கு நகரங்களில் வெடிச் சப்தங்கள் அதிர்ந்தன. இஸ்ரேலிய மீட்புப் படையினர், பெய்ட் ஷேமேஷ் நகரில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications