3 நாடுகள் சுற்றுப்பயணம்: பிரான்ஸ் சென்றடைந்தார் மோடி- முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பாரீஸ்: மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள பிரதமர் மோடி, முதல்கட்டமாக பிரான்ஸ் சென்றடைந்துள்ளார். இந்த பயணத்தின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி, பொருளாதார வளர்ச்சி இரண்டையும் நோக்கமாக கொண்டு பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக அவர், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் சென்றடைந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் குமார் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளனர்.
4 நாட்கள் பிரான்ஸில் தங்கவுள்ள பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அதிபரை சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
ஏற்கனவே, பிரான்ஸ் நாட்டுடன் இந்தியாவுக்கு ராணுவம், அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நல்லதொரு ஒத்துழைப்பு உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
இந்தப் பயணத்தின்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்னும் ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக பிரான்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், ராணுவ உற்பத்தி துறையிலும் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, முதலாம் உலகப்போர் நினைவிடத்திற்குச் சென்று பிரான்ஸ் நாட்டிற்காக சண்டையிட்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மோடி மரியாதை செலுத்துகிறார்.
இந்த பயணத்தைத் தொடர்ந்து ஜெர்மனிக்குச் செல்லும் மோடி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சுற்றுப்பயணத்தின் இறுதியாக பிரதமர் மோடி கனடாவிற்கு சென்று, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
16-ந்தேதி 3 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்படுகிறார்.












Click it and Unblock the Notifications