சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா.. 71ல் 61 ‘அவுட்’.. சளைக்காமல் பதிலடி கொடுத்த உக்ரைன்!
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில் இன்றும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா இன்று (பிப்ரவரி 10) ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தரப்பில் 71 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவம் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைய விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த ஆண்யு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது.

ஓராண்டாக தொடரும் போர்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் சில நாட்களில் ஓராண்டை நிறைவு செய்யவுள்ளது. ஆனாலும், இந்தப் போர் மேகங்கள் விலகுவதாக இல்லை. ரஷ்யா விடாமல் உக்ரைனை அச்சுறுத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில் இன்று உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இன்று அசோவ் கடலிலிருந்து ஈரானில் தயாரிக்கப்பட்ட "காமிகேஸ்" ட்ரோன்களையும், கருங்கடலிலிருந்து காலிபர் ஏவுகணைகளையும் உக்ரைனைத் தாக்க ரஷ்யா ஏவியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள முக்கியமான உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் தகவல்
இந்த தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், மின்சாரம் தடைபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ட்ரோன்கள், ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் ரஷ்யா
ரஷ்யா 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ரஷ்யா தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் உக்ரைன் நாட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்துகிறது என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications