சிட்னியில் இந்திய உணவகம் மீது துப்பாக்கிச்சூடு: மர்மநபருக்கு வலை
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய உணவகத்தின் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் ஹாரிஸ் பார்க் பகுதி விக்ராம் தெருவில் உள்ளது பில்லுஸ் என்ற இந்திய உணவகம். செவ்வாய்க்கிழமை இரவு உணவகத்தில் கூட்டமாக இருந்தது. உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை சேர்த்து 30 முதல் 40 பேர் இருந்தனர். 9 மணி ஆக சில நிமிடங்கள் இருக்கையில் மர்ம நபர் ஒருவர் வெளயே நின்று கொண்டு உணவகத்தை நோக்கி தனது துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார்.

இதில் உணவகத்தின் வெளிக்கண்ணாடியை துளைத்த குண்டு இரும்பு அலமாரியின் மீது பாய்ந்தது. இதனால் நல்லவேளையாக உணவகத்தில் இருந்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நீல நிற பேண்ட் அணிந்திருந்த அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு விக்ராம் தெருவின் தென்பகுதி நோக்கி ஓடியதை பலரும் பார்த்துள்ளனர்.
அந்த மர்ம நபரை அடையாளம் காண யாராவது முன்வர மாட்டார்களா என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணின் உதவியை போலீசார் எதிர்பார்க்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடக்கும் முன்பு சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஒருவர் வேகமாக மோதியுள்ளார். அந்த பெண் மீது மோதிய நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இந்திய உணவகங்கள் மற்றும் கடைகள் அதிகம் உள்ள ஹாரிஸ் பார்க் பகுதியில் இந்த ஆண்டு நடந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஹாரிஸ் பார்க் பகுதியில் மக்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருவர் திடீர் என துப்பாக்கிச்சூடு நடத்தினார்.












Click it and Unblock the Notifications