டி20 உலககோப்பை தோல்வி.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?
இஸ்லாமாபாத்: உலககோப்பை டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறிய நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலககோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகின்றன. தகுதி சுற்று போட்டிகள், லீக் போட்டிகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் முன்னேறின.
இந்தியா-பாகிஸ்தான், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. இதையடுத்து நான்கு அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதின.

இறுதி போட்டியில் பாகிஸ்தான்
நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதில் சிரமப்பட்ட பாகிஸ்தான் அணி முதலாவதாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியா தோல்வி
இதையடுத்து நேற்று 2வது அரையிறுதி போட்டி நடந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

பைனல் எப்போது?
இதையடுத்து இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி டி20 உலககோப்டை சாம்பியன் பட்டத்தை வெல்லும். இதனால் இங்கிலாந்து-பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர்
இந்நிலையில் தான் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற நிலையில் இந்தியாவை கலாய்க்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்து இருந்தார். அதில், ‛‛இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 Vs 170/0 இடையே மோதல் நடக்கிறது'' என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் ஷேபாஸ் ஷெரீப் இந்தியாவை கலாய்த்துள்ளார். அதோடு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரண்டு அணிகள் 2022 உலககோப்பை டி20 பைனலில் மோத உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டின் பின்னணி என்ன?
ஷேபாஸ் ஷெரீப்பின் ட்விட்டர் பதிவின்படி 152/0 என்பது பாகிஸ்தானை குறிக்கும். அதாவது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி துபாயில் நடந்த உலககோப்பை டி20 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 151 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் 152 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனை தான் ஷேபாஸ் ஷெரீப் இப்படி கூறியுள்ளார்.

நேற்றைய நிலவரம்
அதேபோல் நேற்றைய டி20 உலககோப்பை அரையிறுதி போட்டியில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்தை குறிப்பிடும் வகையில் ஷேபாஸ் ஷெரீப் 170/0 என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் -இங்கிலாந்து அணிகள் டி20 உலககோப்பை பைனலில் விளையாடுவதை குறிக்கும் வகையிலும் இந்தியாவை கலாய்க்கும் வகையிலும் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில் 152/0 Vs 170/0 என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications