102 குழந்தைகளே போதும்.. இனியும் முடியாது! 12 மனைவிகளையும் கருத்தடை யூஸ் செய்ய சொன்ன உகாண்டா முதியவர்
கம்ப்ளா: 102 மகன், மகள்கள், 568 பேர பிள்ளைகள், 12 மனைவிகள், இனி குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை கைவிட்டுவிட்டாராம் உகாண்டா முதியவர்.
யப்பா! ஒரு திருமணம் செய்து கொள்ளவே நாக்கு தள்ளுகிறது. பெண் பார்த்து, பெண்ணுக்கு பையனை பிடித்து, பையனுக்கு பெண்ணை பிடித்து, ஜாதகம் பார்த்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெளியிடத்தில் விசாரித்து நல்ல குடும்பம் என தெரிந்தவுடன் சொந்த பந்தங்களுக்கு தெரிவிப்பர்.
இதையடுத்து கை நனைக்கும் பழக்கம் உள்ளவர்கள், அந்த சம்பந்தம் பிடித்துவிட்டால் கையை நனைக்க வருவார்கள், இதன் பின்னர் நிச்சயதார்த்தம், திருமணம், பத்திரிகை அடித்ததில் என் பெயரை விட்டாச்சு, அவன் பெயரை போட்டாச்சு என சண்டை சச்சரவுகள், அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் என மண்டை காய்ந்துவிடும்.

வீட்டை கட்டி பார்
சும்மாவா சொன்னார்கள், வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பாரு என்று! இவர்களுக்காவது பரவாயில்லை. நம்ம 90 ஸ் கிட்ஸில் பலர் இந்த திருமண விவகாரத்தில் இன்னமும் பேபி ஸ்டெப்பை கூட எடுத்து வைக்காமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்கள். பெண் பார்க்க சென்றால், நீங்கள் கவர்மென்ட் மாப்பிள்ளையா, டாக்டரா, என்ஜீனியரா, எத்தனை வீடு உள்ளது, எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது?

ஊரில் வீடு இருக்கட்டும்
ஊரில் வீடு இருக்கட்டும், சென்னையில் எத்தனை வீடு இருக்கிறது, கார் இருக்கிறதா, என்ன சம்பளம், கடன் ஏதேனும் வாங்கியிருக்கிறீரா, வெளிநாட்டுக்கு போவீர்களா, உங்களுடன் உங்கள் அம்மா, அப்பாவும் இருப்பார்களா.. உங்கள் தங்கச்சிக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்கவில்லை... இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கிறார்கள்.

உகாண்டா முதியவர்
நிலைமை இப்படியிருக்க! ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் லுசாகாவை சேர்ந்தவர் மூசா ஹசாயா. இவருக்கு 67 வயதாகிறது. இவருக்கு 12 மனைவிகள், அவர்கள் மூலம் 102 மகன், மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 568 பேரன், பேத்திகள் உள்ளனர். உகாண்டாவில் பலதார திருமணங்கள் சட்டபடி செல்லும் என்பதால் மூசா 12 பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது குடும்த்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இனி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

குழந்தை பிறப்பு
ஆனால் மனைவிகள் குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளாராம். திருமணம் குறித்து மூசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் ஒரே ஒரு மனைவியுடன் ஒரு ஆணால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. 12 மனைவிகளும் ஒரே வீட்டில் என்னுடன் வசித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் வேறு ஆணுடன் தொடர்பு கொள்கிறார்களா என்பதை என்னால் கண்காணிக்க முடியும். நான் அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொண்டதால் எனது வருமானம் போதவில்லை. ஒரு பெண்ணுடன் மட்டுமே இல்லறத்தில் ஒரு ஆண் எப்படி திருப்தியடைய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

16 ஆவது வயதில் திருமணம்
1971 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் பள்ளி படிப்பை முடித்தவுடன் ஹனிபா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இரு ஆண்டுகள் கழித்து தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டே வந்தார் மூசா. மூசாவின் குழந்தைகளில் 6 வயது முதல் 51 வயது வரை உள்ளனர்.

அரசின் உதவி
மூசா கடைசியாக திருமணம் செய்து கொண்ட பெண், மூசாவின் முதல் குழந்தையை விட 21 வயது குறைவு. மூசாவின் குழந்தைகளில் மிக சிறிய குழந்தைக்கு 6 வயதாகிறது. குழந்தைகள், பேர குழந்தைகளின் பெயர்கள தெரியாத போதிலும் தன்னால் அவர்களை அடையாளம் காணமுடியும் என்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைக்க மூசா போராடுவதால் அரசின் உதவியை நாடியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications