திடீரென சரிந்த விமானம்.. ஜிம்பாப்வேயில் நடந்த விபத்தில் இந்திய கோடீஸ்வரர் பலி.. அங்கே என்ன நடந்தது
ஹராரே: இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவும் அவரது 22 வயது மகனும் விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வேயில் மிக மோசமான விமான விபத்து அரங்கேறியது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே சென்ற போது இந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது அவர்களின் பிரைவேட் விமானம் என்றும் தொழில்நுட்பக் கோளாறால் அங்கே விழுந்து நொறுங்கியதும் தெரிய வந்தது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்திய கோடீஸ்வரர்: இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரில் ஒருவர் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும் சுரங்க தொழிலில் கொடி கட்டி பறக்கும் நபருமான ஹர்பால் ரந்தாவா இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் அவரது 22 வயது மகன் அமர் ரந்தாவா என்பவரும் உயிரிழந்ததாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஹர்பால் ரந்தாவா ரியோஜிம் (RioZim) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரியோஜிம் என்ற நிறுவனம் தங்கம், நிலக்கரி, நிக்கல் மற்றும் தாமிரத்தைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் GEM ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
விபத்து: சுரங்க அதிபர் ஹர்பால் ரந்தாவாவும் அவரது மகனும் ரியோசிம் நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா 206 என்ற பிரைவேட் விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹராரேயில் இருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து அரங்கேறி உள்ளது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த விமானம் முரோவா டயமண்ட்ஸ் சுரங்கம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த மோசமான விமான விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.
ரந்தவாவின் நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹோப்வெல் சினோனோ இது குறித்துக் கூறுகையில்,"ரியோ ஜிம் உரிமையாளரான ஹர்பால் ரந்தாவாவின் மறைந்துள்ள செய்தி வருத்தமளிக்கிறது. விமானத்தில் இருந்த பைலட் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்தனர் என்பது சோகமான விஷயம். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.

நான் சந்தித்த மிக சிறந்த நபர்களில் ஒருவர். செல்வந்தராக இருந்தாலும் மிகவும் பணிவாக இருந்த நபர்.. அவர் மூலம் நான் வணிக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நான் உலகில் பலரைச் சந்தித்தேன். என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் இவரை மன்னிக்கவே மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார். அவரது மறைவையொட்டி நாளைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்: இந்த விபத்தில் உயிரிழந்த மற்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகவில்லை. $4 பில்லியன் டாலர் மதிப்புடைய GEM ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைக் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். ஜிம்பாப்வேயில் சுரங்க நிறுவனத்தை நடத்தி வரும் இவர்கள், இந்தியாவிலும் விரைவில் சுரங்க தொழிலைத் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்த ஹர்பால் ரந்தாவாவின் மகன் அமர் ரந்தாவா பயிற்சி பெற்ற விமானி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications