"இது" மட்டும் வேண்டவே வேண்டாம்.. வார்னிங் மெசேஜ் அனுப்பிய மொசாட்.. கண்டுகொள்ளாத இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: உலகிலேயே மிகவும் வலிமையான உளவு அமைப்புகளில் ஒன்று மொசாட். எந்தவொரு நாடாக இருந்தாலும் சத்தமே இல்லாமல் உள்ளே போய் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட மொசாட் அமைப்பு கூட முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் இருந்தபோது தாக்குதல் நடத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டதாம். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். காசாவில் இருக்கும் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் முக்கிய தலைவர்களை ஏற்கனவே இஸ்ரேல் கொன்றுவிட்ட போதிலும், ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் சொல்லிவிட்டது.

இஸ்ரேல் தாக்குதல்
இதனால் ஹமாஸின் அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அந்நாட்டின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பும் முக்கிய உளவுத் தகவல்களைக் கொடுத்து உதவி வருகிறது. ஹமாஸை காலி செய்ய மொசாட்டின் உளவுத் தகவல்கள் இஸ்ரேலுக்குப் பெரியளவில் உதவி வருகிறது. இந்தச் சூழலில் அந்த மொசாட் அமைப்பே ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் இருந்தபோது தாக்குதல் வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறது.
மொசாட் எதிர்ப்பு
அதாவது ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் கத்தாரில் இருந்தபோது, அது குறித்த தகவல் மொசாட்டிற்கு கிடைத்துள்ளது. கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் எங்கு இருந்தனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனாலும், தாக்குதல் நடத்த வேண்டாம் என மொசாட் முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
மொசாட் அமைப்பிற்கும் கத்தாருக்கும் இடையே பல காலமாக நல்லுறவு இருக்கிறது. இந்தச் சூழலில் திடீரென கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் அது இரு தரப்பு உறவைப் பாதிக்கும் எனச் சொல்லி மொசாட் அதை எதிர்த்துள்ளது. இப்போது தாக்குதல் நடத்தினால் வரும் காலங்களில் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் எனச் சொல்லியுள்ளனர். இந்தத் தாக்குதலை இப்போது நடத்த வேண்டாம் என்றே மொசாட் தலைவர் டேவிட் பார்னியா கூறியிருக்கிறார்.
ஆனால், அதையும் தாண்டி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் கத்தார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. ஆனால், இது குறித்து இஸ்ரேல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மொசாட் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. மொசாட்டிற்கு இந்தத் தாக்குதலில் துளியும் உடன்பாடு இல்லை என்பதையே இது காட்டுவதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார் சொல்வது என்ன
அதேநேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காலிப் அல்-ஹய்யா உள்ளிட்ட உயர்மட்ட ஹமாஸ் அதிகாரிகள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள் மற்றும் ஒரு கத்தார் அதிகாரி மட்டுமே கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீனியக் குழு தெரிவித்தது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை கத்தார் தான் மத்தியஸ்தம் செய்து வைக்கிறது. அப்படியிருக்கும்போது கத்தார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியது. அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இஸ்ரேல் பொறுமை இழந்துவிட்டதையே இது காட்டுகிறது. அதேநேரம் தனது நாட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கத்தார், இதை அரசு பயங்கரவாதம் என்றும் அமைதி பேச்சுவார்த்தையை நாசம் செய்யும் துரோகம் என்றும் சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications