சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள்
குமரி: நாகர்கோவில் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட சம்பவம் அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதிகாரிகள் வாகனத்தில் இருந்த எந்த பொருட்களையும் விடாமல் சோதனை செய்தனர். ஒரு கட்டத்தில், வாகனத்தின் பேட்டரி இருக்கும் பகுதியை திறந்து காட்டும்படி பாதுகாவலரிடம் அதிகாரிகள் கேட்டு அதிலும் சோதனை நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் என பலரும் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலிலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நாகர்கோவிலில் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எடப்பாடியின் வாகனத்தில் சோதனை மேற்கொண்டதால் திடீர் பரபரப்பு உண்டானது. வாகனத்தில் உள்ள பைகள், பெட்டிகளை அங்குலம் அங்குலமாக சோதனை செய்த நிலையில், ஒரு கட்டத்தில், வாக னத்தின் பேட்டரி இருக்கும் பகுதியிலும் சோதனையிட்டனர்.
தேர்தல் தேதி அறிக்கபட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் சாலைகளில் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் குமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற எடப்பாடியின் வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
பேட்டரி இருக்கும் பகுதியை
நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் அங்கிருந்து புறப்பட்டு பிரசார வாகனத்தில் ஏறி ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தார். அப்போது கூட்டுறவு தணிக்கை அலுவலர் ஜெய சுபாஷினி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
உங்கள் வாகனத்தில் சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர். உடனே எடப்பாடியும் சோதனை செய்ய அனுமதித்தார். உடனே வாகனத்தில் இருந்த ஒவ்வொரு பெட்டி மற்றும் பைகளில் சோதனை நடத்தினர். வாகனத்தில் இருந்த எந்த பொருட்களையும் விடாமல் சோதனை செய்தனர். ஒரு கட்டத்தில், வாகனத்தின் பேட்டரி இருக்கும் பகுதியை திறந்து காட்டும்படி பாதுகாவலரிடம் அதிகாரிகள் கேட்டனர்.
அங்குலம் அங்குலமாக சோதனை
"சார், இது பேட்டரி வைக்கிற இடம், இதையும் திறக்க வேண்டுமா?" என பாதுகாவலர் சற்றே தயக்கத்துடன் கேட்டார். இதை பார்த்த எடப்பாடி பழனிசாமி, சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், "பரவாயில்லை, பேட்டரி பாக்சையும் திறந்து காட்டுங்கள்" என கூறினார். இதையடுத்து அந்த பகுதியையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்தனர். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்த சோதனை நடந்தது.
இந்த தீவிர சோதனையில் பணம், பரிசு பொருட்கள் எதுவுமே இல்லை. வாகனத்தின் முன் கட்டியிருந்த கட்சி கொடிக்கும் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது. இந்த சோதனைகள் முடிந்த பிறகு அதிகாரிகள் வாகனத்தை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை மறித்து தீவிர சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.












Click it and Unblock the Notifications