50 செயின், 100 மோதிரம், 100 கம்மல்.. நாகர்கோவில் பிரணவ் கடையில் அனைத்தும் போலி.. அதிர்ந்த போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் இயங்கி வந்த பிரணவ் நகைக்கடையில் 50 செயின்கள் மற்றும் நெக்லஸ்கள், 100 மோதிரங்கள், 100 கம்மல்கள் என இருந்தன. இவை அனைத்தும் போலி நகைகள் என்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
திருச்சியில் இயங்கி வந்த பிரணவ் என்ற பிரபல நகைக்கடை, நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை ஆகிய ஊர்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டது. இங்கு நகை வாங்கினால் செய்கூலி சேதாரம் இல்லை என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக மக்களிடம் கவர்ச்சி விளம்பரங்கள் செய்தது. பல கிளைகள், பெரு நிறுவனம் என்று நம்பி பலரும் முதலீடு செய்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால், பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டு தொகைக்கு 9 சதவீதம் வரை போனஸ் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில் பகுதியில் ஏராளமான மக்கள் இந்த ஆசை முதலீடு செய்தனர்.
ஆனால் பிரணவ் ஜூவல்லரி முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு முடிந்த உடன் அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் இழுத்தடித்து மோசடி செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் பலர் திருச்சி, மதுரை உள்ளிட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இதனிடையே கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். இதையடுத்து புகார் தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சியில் அப்படி என்றால், நாகர்கோவிலில், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் கடந்த வியாழக்கிழமை மாலை நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிரணவ் நகைக்கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தார்கள். 4 மணி நேரம் நடந்த இந்த சோதனை குறித்து அப்போது தகவல் வரவில்லை.
இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் பிரணவ் நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையின் மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. மாற்றுச்சாவி இல்லாததால் அந்த கதவை வெல்டிங் எந்திரம் மூலம் திறந்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கடையில் 50 செயின்கள் மற்றும் நெக்லஸ்கள், 100 மோதிரங்கள், 100 கம்மல்கள் இருந்தன. ஆனால் இந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் போலி நகையை விற்றார்களா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் பிரணவ் ஜூவல்லரியில் பணம் செலுத்தி ஏமாந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் போலீசாரிடம் புகார் கூறினார்கள். அப்போது போலீசார் இது தொடர்பாக திருச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அங்கு சென்று புகார் அளியுங்கள் என்று அறிவித்தனர்.
பிரணவ் ஜூவல்லரியில் முதலீடு செய்து மதுரையில் தான் அதிகமான மக்கள் ஏமாந்துள்ளனர். ஏற்கனவே நியோ மேக்ஸ் ஏமாற்றியது ஒருபுறம் எனில், அந்த சூடு தணிவதற்குள் அடுத்ததாக பிரவண் ஜூவல்லரியும் ஏமாற்றியிருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு எல்லாம் பெரிய அடியாக போலி நகைகள் நாகர்கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், போலி நகைகள் பிரணவ் ஜூவல்லரியில் விற்கப்பட்டதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications