கன்னியாகுமரி அருகே குளத்தில் மிதந்த பேரூராட்சி பெண் ஊழியரின் கணவர்.. என்ன காரணம்?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே வில்லுக்குறி பேரூராட்சியில் பில் கலெக்டராக ஜீவா என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஜோசப் ஜெயசிங். இந்த தம்பதி வில்லுக்குறி வெள்ளச்சிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள். இந்நிலையில் பேரூராட்சி ஊழியர் ஜீவாவின் கணவர் குளத்தில் மிதந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணம்? என்ன நடந்தது என்று இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள சிறிய பேரூராட்சி வில்லுக்குறி பேரூராட்சி. இங்கு பில் கலெக்டராக 31 வயதாகும் ஜீவா என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ஜோசப் ஜெயசிங்குக்கு 38 வயது ஆகிறது. இவர்களுடைய சொந்த ஊர் அஞ்சுகிராமம் பகுதியாகும். ஜீவா பில் கலெக்டராக இருப்பதன் காரணமாக வில்லுக்குறி வெள்ளச்சிவிளை பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது.

ஈரோடு சென்ற மனைவி
கடந்த 2-ந்தேதி ஜீவா ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். அங்கு சென்றவர் சம்பவத்தன்று தனது கணவர் ஜோசப் ஜெயசிங்கிற்கு செல்போனில் அழைத்துள்ளார். அவர் எடுத்து பேசவில்லை. இதையடுத்து ஜீவா தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்
கதவு திறந்து கிடந்தது
அதன்படி உறவினர் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் ஜோசப் ஜெயசிங் அங்கு இல்லை. இதுபற்றி ஜீவாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜீவா லீவு வாங்கி கொண்டு ஊருக்கு வந்தார். தொடர்ந்து இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
குளத்தில் ஜோசப்
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுங்கான்கடை அருகே உள்ள ஐக்கியான்குளம் அருகே ஒரு இருசக்கர வாகனம் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைதது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தது, அந்த பைக் ஜோசப் ஜெயசிங்கினுடையது என்று போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், அந்த குளத்தை சுற்றி தேடினர். அப்போது குளத்திற்குள் ஒரு ஆண் பிணம் மிதப்பதை கண்டனர். உடனே இதுபற்றி போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது ஜீவாவின் கணவர் ஜோசப் ஜெயசிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜோசப், ஜெயசிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications