திரண்ட 50000 தொண்டர்கள்.. ராகுல் காந்தியின் பாரத் ஜுடோ யாத்திரை.. 2 நாள் பயணம் தொடங்கியது!
கன்னியாகுமரி: பாரத் ஜுடோ யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.
காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் மிக நீண்ட யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரை நேற்று மாலை தொடங்கியது. நேற்று மாலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி சிலைக்கு முன்பாக இந்த யாத்திரை தொடங்கியது.
முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை கொடுத்து இந்த பயணத்தை தொடங்கி வைத்தார். உலக அளவில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் இவ்வளவு நீண்ட தூரத்திற்கு யாத்திரை சென்றது இல்லை என்று கூறப்படுகிறது.
மக்களிடம் செல்.. என்ற தத்துவத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி இந்த நீண்ட யாத்திரையை மேற்கொள்கிறார்.

எவ்வளவு தூரம்
மொத்தம் 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

யாத்திரை இரண்டாம் நாள்
பாரத் ஜுடோ யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர்.

என்ன திட்டம்
அகஸ்தீஸ்வரத்தில் இன்று இரண்டாவது நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமரியில் மட்டும் ராகுல் காந்தி 1 லட்சம் பொதுமக்களை சந்திக்க உள்ளார். அதேபோல் 118 இளைஞர்கள் ராகுல் காந்தியுடன் கடைசி வரை பயணம் செய்வார்கள். இதில் 28 பெண்களும் அடக்கம். இவர்கள் எல்லோரும் தங்கவும், தூங்கவும் மொத்தம் 60 கேரவன்கள் சகல வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளன.

தயார் நிலை
கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக காஷ்மீருக்கு இந்த யாத்திரை செல்ல உள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் நாடு முழுக்க இருந்து தயார் செய்யப்பட்டுள்ளனர். குறைந்தது அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு எல்லையில்தான் ராகுல் காந்தி பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications