"திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விஜய்?" வந்து விழுந்த கேள்வி.. காங். எம்பி விஜய் வசந்த் பரபர பதில்
கன்னியாகுமரி: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை தொகுதி வாரியாக 10, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை வாழ்த்தி அவர்களுக்கு உதவித் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் விஜய் அடுத்து அரசியலுக்கு வர விரும்புவதாக சில ஆண்டுகளாகவே சொல்லப்படுகிறது. அதற்கான தொடக்கமாகவே இது இருக்கும் எனப் பலரும் கருதுகின்றனர். இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா நேற்றைய தினம் நாடு முழுக்க அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், அங்கே பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், "விஜய் இப்போது தான் முதல் கூட்டத்தை நடத்தியுள்ளார். அவருக்கு ஏற்கனவே அரசியலில் ஆர்வம் இருந்தது. அதை இப்போது தான் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். வரும் நாட்களில் பொறுத்துப் பார்ப்போம். திமுக காங்கிரஸ் கூட்டணியில் விஜய்யை இணைக்கத் தயாராகவே இருக்கிறோம்.
இருப்பினும், கூட்டணி குறித்தெல்லாம் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது எல்லாம் புதிது இல்லை. பல தலைவர்கள் கலை துறையில் இருந்து வந்து அரசியலில் சாதித்து உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், "அமலாக்கத் துறை அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். செந்தில் பாலாஜி விவகாரத்தில் வழக்கு இருப்பது எல்லாம் சரி. விசாரணையை நடத்தலாம். ஆனால், 13 மணி நேரம் சித்தரவதைச் செய்து, நள்ளிரவில் கைது செய்துள்ளார்கள்.
மத்தியில் ஆளும் அரசு தான் ஆளாத மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுப்பது புதிது இல்லை. அதையே தான் செந்தில் பாலாஜிக்கும் செய்கிறார்கள். நடவடிக்கை எடுத்ததை யாரும் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், அதிகாரிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையே தவறு என்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை குறித்துப் பேசிய அவர், கல், மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட 4 வழிச்சாலை பணிகளுக்கு, 1041 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் இதனால் கன்னியாகுமரியில் இப்போது 4 வழிச்சாலை பணிகளைத் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் தொடர்ந்து அரசியலை நோக்கியே இருந்து வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். மேலும், உலக பட்டினி தினத்தன்றும் 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டது. இப்போது 10, பிளஸ் 2 தேர்வுகளில் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளைச் சந்தித்து வாழ்த்தினார்.
இந்தக் கூட்டம் நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விஷயம் என்னவென்றால் பாராட்டு விழாவில் மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் என்று இல்லாமல் தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதை வைத்தே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி எனப் பலரும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications