நான் வடசேரி எஸ்ஐ.. கன்னியாகுமரி காதலன் குடும்பத்திற்கே அல்வா கொடுத்த தேனி பெண்.. சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பியூட்டி பார்லருக்கு சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி போலீஸ் சீருடையில் வந்த பெண் ஒருவர் பேசியல் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதுபற்றி சந்தேகம் அடைந்து நடத்திய விசாரணையில், காதலனை திருமணம் செய்வதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடமணிந்தது தெரியவந்தது. இதையடுத்து நாகர்கோவில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரைபற்றி விவரமாக பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் வெங்கடேசன் என்பவர், பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சந்திப்பில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெண்கள் அழகு நிலையத்தை வெங்கடேசனின் மனைவி நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு போலீஸ் சீருடையில் பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண் தான் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று வேலை செய்பவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் அவர் முகத்தில் இருந்த மருக்களை அகற்றியும், தலைமுடி அலங்காரம் செய்தும், பேசியல் செய்துள்ளார். ஆனால் அவற்றிற்கு பணம் கொடுக்கவில்லை.. எஸ்ஐ என்ற பெயரை சொல்லி ஓசியில் முகத்தை அழகுபடுத்தியவர், போலீசாக இருப்பாரா என்ற சந்தேகம் பியூட்டி பார்லர் உரிமையாளர் வெங்கடேசனுக்கு ஏற்பட்டது. இதனால் வெங்கடேசன் வடசேரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில், எங்களுடைய பியூட்டி பார்லருக்கு கடந்த அக்டோபர் மாதம் 28 மற்றும் 31-ந் தேதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி போலீஸ் சீருடையில் பெண் ஒருவர் வந்தார். அவர் முகத்திற்கு ஃபேசியல் செய்துவிட்டு பணம் கொடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் பெயர் அபி பிரபா (வயது 34) என்ற பெண் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஏமாற்றியது என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் ஆச்சரியமான சில விஷயங்கள் தெரியவந்தது. அதனை பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் வடுகப்ட்டியைச் சேர்ந்த 34 வயதாகும் அபி பிரபா 66 வயதான முருகன் என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபி பிரபா பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அபிபிரபா சென்னை தி.நகரில் துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அங்கு பணியாற்றிய சக ஊழியர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த சக ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இதற்காக அவர்கள் ரயிலில் சென்ற போது நாகர்கோவில் பள்ளிவிளை பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன், அபிபிரபாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து அபி பிரபா, அந்த இளைஞரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். அப்போது அந்த இளைஞர் தனது பெற்றோர் காவல்துறையில் பணிபுரிபவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருப்பதாக அபிபிரபாவிடம் கூறியுள்ளார்.
இதனால் அந்த இளைஞரின் பெற்றோரை நம்ப வைக்க அபிபிரபா திட்டமிட்டார். அதற்கு அந்த இளைஞரும் சம்மதித்தாராம்.. இதற்காக அவர் நாகர்கோவில் பள்ளிவிளையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். அதன்பின்னர் அபி பிரபா தனது நண்பர் மூலமாக போலீஸ் சீருடை வாங்கியிருக்கிறார்.பின்னர் அந்த சீருடையில் சென்னை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அந்த இளைஞருக்கு அனுப்பியுள்ளார். காதலனும் அந்த புகைப்படங்களை தனது பெற்றோரிடம் காண்பித்து திருமணத்துக்கு சம்மதம் பெற்றாராம்.
திருமணம் இனிதே நடக்கபோகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த அபி பிரபா, பெண் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் பியூட்டி பார்லருக்கு சென்றதுடன், அங்கு ஓசியில் ஃபேசியல் செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வடசேரி போலீசார் அபி பிரபாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சீருடை, போலி அடையாள அட்டை மற்றும் அவருடைய செல்போனில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்த புகைப்படங்கள், போலீஸ் நிலையம் போன்று செட்டப் செய்த வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications