கேலி செய்ததை தட்டிக்கேட்ட விதவை பெண்.. பட்டப்பகலில் நடுசாலையில்.. கட்டிவைத்து அடி.. குமரியில் ஷாக்
பட்டப்பகலில் ஒரு பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி: தன்னை தொடர்ந்து கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட விதவைப் பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நடுசாலையில் மின்கம்பத்தில் கட்டி வைத்த கொடூர சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததை செய்திகளில் படித்திருப்போம். ஆனால், தமிழ்நாட்டில் இப்படியொரு அராஜக சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கணவரை இழந்த பெண் என்று கூட பார்க்காமல் அவரை கம்பத்தில் கட்டி வைத்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்த கேலி கிண்டல்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையைச் சேர்ந்தவர் சித்ரா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார் சித்ரா. இதனிடையே, சித்ரா மேல்புறம் சந்திப்பில் உள்ள கடைகளுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். அவ்வாறு அவர் வாங்கும் போதெல்லாம், அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சித்ராவை கிண்டல் செய்வதும், ஆபாசமாக பேசுவதுமாக இருந்துள்ளனர்.

தாங்க முடியாத ஆத்திரம்
இதனை சித்ரா சில சமயங்களில் நாசூக்காக கண்டித்து வந்துள்ளார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் திரும்ப திரும்ப அவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்த சூழலில், நேற்று மதியம் மேல்புறம் சந்திப்பு அருகே சித்ரா சென்ற போது வழக்கம் போல அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சித்ரா, தனது வீட்டுக்கு சென்று பெரிய கம்பை எடுத்து வந்து ஆட்டோ டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அடக்க முடியாத ஆத்திரம்
அனைவரின் முன்னிலையிலும் ஒரு பெண் தங்களை திட்டுவது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சித்ராவை தாக்கிய அவர்கள், அவரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பட்டப்பகலில் ஒரு பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின் கம்பத்தில் கட்டி வைத்து..
இதன்பேரில் அங்கு வந்த அருமனை போலீஸார், உடனடியாக அங்கு வந்து கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சித்ராவை மீட்டனர். மேலும், அவரை தாக்கி கம்பத்தில் கட்டி வைத்த மேல்புறத்தைச் சேர்ந்த சசி (47), வினோத் (44), திபின் (35), விஜயகாந்த் (37), அரவிந்த் (43) ஆகிய 5 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் சசி, வினோத், விஜயகாந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் நடக்கும் சம்பவத்தை போல நடைபெற்ற இந்த சம்பவம் கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications