பாதுகாக்கப்படும் விஜய் தொண்டர்களின் 450 கிலோ செருப்புகள்.. கரூர் சம்பவத்தில் நடப்பது என்ன? முக்கியம்
கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டம் ஒரு பெரும் துயர சம்பவமாக மாறியது. கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான செருப்புகள் சிதறிக் கிடந்தன. இந்நிலையில் சம்பவ இடத்தில் விசாரணை ஆணையம் மற்றும் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அங்கு சுமார் 450 கிலோ செருப்புகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாத்து வைத்துள்ளனர் அதிகாரிகள்.
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதில் 18 பெண்கள், 5 சிறுவர்கள், 13 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது திருச்சி மற்றும் மதுரையில் நான்கு பேர் சிகிச்சை பெற்றனர்.

விஜய் த.வெ.க
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதற்கு தலைவராக ஐஜி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்பிக்கள், ஒரு ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முதல் கட்ட ஆவணங்களை பெற்ற சிறப்பு புலனாய்வு குழு கரூர் சென்றது.
சிறப்பு புலனாய்வு குழு
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலுச்சாமிபுரம் சென்றனர். அங்கு விஜய் பிரச்சாரம் செய்த இடம், அவரது பேருந்து நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடம், சாலையில் நெரிசல் ஏற்பட்ட பகுதிகள், முறிந்து விழுந்த மரக்கிளைகள், தாவி குதித்த தொண்டர்கள் ஏறியதாக சொல்லப்படும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் எஸ்.ஐ, தனிப்பிரிவு போலீசாரிடமும் அஸ்ரா கார்க் விசாரணை நடத்தினார்.
கூட்ட நெரிசல்
இந்நிலையில், திடீர் நெரிசல் காரணமாக மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடும் போது, பலர் தங்கள் காலணிகள், பைகள், கைப்பேசிகள் உள்ளிட்ட உடமைகளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர். அந்த நேரத்தில் சாலையெங்கும் காலணிகள் சிதறி கிடந்தன. துயர சம்பவம் முடிந்த பின், கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் பரவியிருந்த அனைத்து காலணிகளையும் சேகரித்து, சாலையோரத்தில் குவித்து வைத்தனர்.
செருப்பு சேகரிப்பு
அதன் பின்னர், சம்பவ இடத்துக்கு ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் ஆகியோர் நேரில் சென்று நிலையை ஆய்வு செய்தனர். அவர்கள் பார்வைக்கு பிறகு, அந்த காலணிகள் சம்பவத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக கருதப்பட்டதால் அவற்றை கவனமாக பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது கட்டமாக காலணிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டன. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அவற்றை குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி, பாலம்மாள் புரம் குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
முக்கி ஆதாரம்
"நேற்று சேகரிக்கப்பட்ட காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும். இவை விசாரணைக்காக தேவையான ஆதாரங்களாக இருக்கக்கூடும் என்பதால் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விசாரணை முடியும் வரை அவை அங்கிருந்தே மாற்றப்படமாட்டாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த அருகிலுள்ள பகுதிகளில் பொறுத்தப்பட்டபட்டி சிசிடிவி கேமரா கட்சிகள், செல்போன் வீடியோக்கள், சமூக வலைதள வீடியோக்கள் மிக முக்கிய ஆதாரம் என்பதால் அவற்றை சேகரிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications