Karur stampede: "மனதை உறைய வைக்கும் விபத்து".. உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சூரி இரங்கல்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மூன்றாவது கட்டமாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விஜயைக் காணவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் வந்த நிலையில் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிவந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சுற்றுப் பயணம், பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நடிகரும், தவெக தலைவருமான விஜய் திருச்சி, அரியலூர், நாகைப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஏற்கனவே கடந்த வாரங்களில் பிரச்சாரம் செய்துவிட்டார். நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் பிரச்சாரப் பகுதியில் காலை முதலே திரண்டிருந்தனர்.

ஆனால், தவெக தலைவர் விஜய் திட்டமிட்ட நேரத்தை விட சற்று கால தாமதமாகவே சென்றதாக புகார் எழுந்தது. கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேற்று இரவே கரூர் மருத்துவமனைக்குச் சென்றனர். இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். நடிகர்கள், திரை பிரபலங்கல், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இன்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications