கரூரில் அண்டா அண்டாவாக கறி.. செந்தில் பாலாஜி படத்துக்கு பால் அபிஷேகம்.. சிக்கன் பிரியாணி விருந்து
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் சொந்த ஊரில் கொண்டாடி வருகிறார்கள். நேற்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த உடனேயே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். இன்று செந்தில் பாலாஜி படத்துக்கு பால் அபிஷேகம் செய்த தொண்டர்கள், வழியில் செல்லும் அத்தனை பேருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் நேற்று மரியாதை செலுத்தினார். இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் உச்ச நீதிதமன்ற உத்தரவுப்படி ஆஜராகி கையெழுத்திட்டார். தொடர்ந்து தற்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் இன்றே சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறம் எனில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளதால் மீண்டும் செந்தில் பாலாஜியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றும். 2 மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக இளையவர்கள் 2 பேர் சேர்க்கப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன், ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் ஆகியோரின் பெயர் அதிகமாக இடம் பெற வாய்ப்பு உள்ளதாம். இதேபோல் ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராவார் என்றும் அதற்கு பதிலாக ஒரு அமைச்சர் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் நிலையில் அவருக்கு கூடுதல் இலாகாக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் அவரது ஆதரவாளர்கள், ஜாமீனில் வெளிவந்ததை கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி5000 பேருக்கு இன்று காலை 8மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சுமார் 5000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்க முடிவு செய்துள்ளார்கள். இதன்படியே மிகப்பெரிய அண்டாக்களில் பிரியாணி சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது. பாக்கெட் பாக்கெட்டாக தயார் செய்து பொதுமக்களை தேடி தேடி சென்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் விநியோகித்து வருகிறார்கள். அதேபோல் செந்தில் பாலாஜி படத்திற்கு பாலஅபிஷேகசம் செய்தும் கொண்டாடி வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications