கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நாதக மாஜி சிவராமன் பலி
கிருஷ்ணகிரி: பாலியல் வழக்கில் கைதான நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி சிவராமன் எலிபேஸ்ட் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே எலி பேஸ்ட் சாப்பிட்டதாக போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி.முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் தங்கி இந்த முகாமில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவி கடந்த 8ஆம் தேதி பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிகாலை 3 மணிக்கு வந்த என்சிசி பயிற்சியாளர் காவேரிபட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30), அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியே சொன்னால், படிப்பே கெட்டுவிடும் என மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் சாம்சனிடம் அந்த மாணவி தெரிவித்த போது, அவரோ பள்ளி பெயர் கெட்டுவிடும், இதை வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார்.
இதனால் அங்கு நீதி கிடைக்கவில்லை என கருதிய மாணவி, சோகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் அவரது தாய் இது குறித்து கேட்ட போது துக்கம் தாளாமல் சிவராமன் தன்னை வேட்டையாடியதை அழுதபடியே சொன்னார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தாய், மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சாம்சன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளியின் முதல்வர், அங்கு பணிபுரியும் 7 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில் ஒருவர் முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் ஆவார். தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் தனிப்படை போலீஸார் கோவையில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது அவர் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்து மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிவராமன் நாம் தமிழர் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவராமனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் போலி என்சிசி பயிற்சியாளர் என்பது தெரியவந்தது.
என்சிசி பயிற்சியாளராக வேண்டும் என்றால் சேலத்தில் உள்ள மத்திய அரசு மையத்தில் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அது போல் எந்த பதிவையும் செய்யவில்லை. இவராகவே இந்த தனியார் பள்ளியைத் தொடர்பு கொண்டு கடந்த 4 அல்லது 5 மாதங்களாக என்சிசி பயிற்சியாளராக இருந்து வந்தாராம்.
இந்த விவகாரத்தில் சிவராமன் உள்பட 11 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவராமன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததும் அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நேற்று அந்த குழு புலனாய்வு விசாரணையை தொடங்கியது.
இந்த நிலையில் போலீஸார் விசாரணையில் இருந்த போது சிவராமனின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரித்த போது அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே எலிபேஸ்ட் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சியே ஆகஸ்ட் 16, 18 ஆகிய இரு நாட்களில் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சிறப்பு விசாரணைக்குழுவினர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஐ.ஜி.பவானீஸ்வரியிடம், சிவராமன் ஏன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பவானீஸ்வரி, "கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவராமன் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் அதிகாலை உயிரிழந்தார். இவர் மேலும் ஒரு வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications