அதிமுகவுடன் கூட்டணியா! நாதக-வின் பிரதமர் வேட்பாளர் யார்? யூகங்களுக்கு எண்ட் கார்ட் போட்ட சீமான்
கிருஷ்ணகிரி: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும், 'இந்தியா' கூட்டணியும் தீவிரமாக போட்டியிட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி இதில் எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் தங்களது பிரதமர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிதான் பதவியேற்பார். இதன் மூலம் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவியேற்றவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. எனவே இதனை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல காங்கிரஸ் கடந்த 9 ஆண்டுகளில் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வந்திருக்கிறது. இது தொடராமல் இருக்க இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டியது முக்கியம்.

இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என தோழமை கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் காங்கிரஸின் இந்தியா கூட்டணியில், திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதேபோல பாஜகவின் தேஜ கூட்டணியில் அதிமுக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டது. அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்திருந்தது. இப்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுகவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம், கூட்டணிக்கு அழைப்பார்கள். இன்னும் நாள் உள்ளது பிறகு தான் பேசவேண்டும்" என பதிலளித்தார். மேலும், "திமுக மன்மோகன் சிங் ஆட்சியில் கூட்டணி இருந்தபோது ஏன் சுங்க சாவடிகளை அகற்றவில்லை, திமுக தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, சி ஐ ஏ, என் ஐ ஏ, போன்றவற்றை கொண்டு வந்தது. தற்போது திமுக புனிதரை போல் செயல்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனது கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லையா என கேட்கிறார்கள், நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications