இங்கிலாந்து புதிய பிரதமர் யார்?.. ரிஷி சுனக்குக்கு வலுக்கும் எதிர்ப்புகள்.. முன்னிலையில் லிஸ் டிரஸ்!
லண்டன்: இங்கிலாந்தில் அடுத்த பிரதமருக்கான ரேசில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி லிஸ் டிரஸ் முன்னிலையில் உள்ளார்.
இங்கிலாந்து பிரதமரான கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

களத்தில் 2 போட்டியாளர்கள்
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதி வேட்பாளராக களத்தில் உள்ளார். இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார். இவர்களில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர். களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

ரிஷி சுனக் பின்னடைவு
இந்த வாக்கெடுப்பானது வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்று 5 ஆம் தேதி முடிவு அறிக்கப்பட உள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். இதனால், அவரது வெற்றி எப்படியும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக லிஸ் டிரஸ் முந்துவதாக தகவல்கள் கூறப்பட்டது. பிரிட்டனை சேர்ந்த முன்னணி இணைய வழி ஆய்வு நிறுவனமான YouGov வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, லிஸ் டிரஸ் ரிஷி சுனக்கை முந்துவதாக தகவல் வெளியிட்டது.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?
தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்வு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடைசியாக வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் ஆகிய இருவர் மட்டுமே களத்தில் உள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சம் உறுப்பினர்கள் பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர். பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு தபால் வாக்கெடுப்பு முறையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட்டு பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்று அறிவிக்கப்பட உள்ளார்.

லிஸ் டிரஸ் க்கு அதிக வாய்ப்பு
இந்த நிலையில், பிரிட்டன் பிரதமருக்கான தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து ஒபினியம் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சுமார் 450 உறுப்பினர்களிடம் இந்த கருத்துக்கணிப்புகள் நடைபெற்றுள்ளன. இதில், 61 சதவீதம் பேர் லிஸ் டிரஸ்-க்கே ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கிற்கு வெறும் 39 சதவீதம் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாவதற்கான வாய்ப்புகள் பிரகசமாக இருப்பது தெரியவந்து இருப்பதாக கருத்துக்கணிப்பு நடத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பில், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க மறுத்தவர்கள் உள்பட மொத்தம் 570 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 3 ல் ஒரு பங்கு பேர் அதாவது 29 சதவீதம் பேர் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக கூறினர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டதாக 47 சதவீதம் பேர் தெரிவித்தனர். வெறும் 19 சதவீதத்தினர் மட்டுமே தங்களின் முடிவுகள் மாற்றத்திற்கு உட்பட்டது என்றனர். ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றது.

ரிஷி சுனக்கிற்கு கடும் எதிர்ப்புகள்
போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் விசுவாசம் மிக்கவராக லிஸ் டிரஸ் விளங்கியதாகவும் அவர் நம்பிக்கைக்குரியவராக தெரிகிறார் என்று அவருக்கு ஆதரவு அளிப்பவர்கள் கூறியதையும் கருத்துக்கணிப்புகளில் காண முடிகிறது. அதேவேளையில், ரிஷி சுனக் ராஜினாமா செய்ததது போரிஸ் ஜான்சனுக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தியதோடு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகவும் முக்கியமான காரணமாக அமைந்தது. இதனால், போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள் மத்தியில் ரிஷி சுனக்கிற்கு கடும் எதிர்ப்புகள் நிலவிவருகிறது.












Click it and Unblock the Notifications