நாய் கடித்தால் மட்டும் இல்லை.. கீறினாலும் ஆபத்து தான்.. பெண் பரிதாபமாக உயிரிழப்பு! உஷார் மக்களே
லண்டன்: ரேபிஸ் ஒரு ஆபத்தான நோய் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக நாய் அல்லது விலங்குகள் எதாவது கடித்தால் தான் இந்த கொடிய ரேபிஸ் தொற்று ஏற்படும் என நாம் நினைப்போம். ஆனால், இங்குப் பெண் ஒருவருக்கு நாய் லேசாகக் கீறியதற்கே ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளார். ரேபிஸ் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்படும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதனால் நாய்க் கடி என்றால் அனைவரும் ஜாக்கிரதையாகவே இருப்போம். ஆனால், பிரிட்டன் நாட்டை சேர்ந்த 59 வயதான பெண்ணுக்கு ரொம்பவே மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரை நாய் கடிக்கவெல்லாம் இல்லை.. சாதாரணமாக கீறியுள்ளது. ஆனால், அதற்கே அந்த பெண்ணுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் பரிதாபமாகக் கொல்லப்பட்டார்.

லேசாகக் கீறிய நாய்க்குட்டி
மொராக்கோவில் தெருவிலிருந்த நாய்க் குட்டி நகம் லேசாக அவர் மீது பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அந்த பெண் பிரிட்டனின் தெற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த இவோன் ஃபோர்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.. அவரது மகள் ராபின் தாம்சன் தனது தாய்க்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ரேபிஸ் நோய்
கடந்த பிப்ரவரி மாதம் மொராக்கோவில் ஒரு நாய்க் குட்டி லேசாகக் கீறியதாகவும் இதுவே பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சாதாரண தலைவலியுடன் ஆரம்பித்தது. பின்னர் நடக்க, பேச, தூங்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்தார்" என்று அவர் கூறினார்.
இந்த கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பேரிழப்பு.. அவரது இழப்பை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.. தயவுசெய்து விலங்குகளின் கடியைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கள் குடும்பத்திலேயே நடக்கும் என்பதை நாங்கள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. உங்கள் செல்லப்பிராணிகளுக்குச் சரியாகத் தடுப்பூசி போடுங்கள். இது குறித்த விழிப்புணர்வை முடிந்தவரை ஏற்படுத்துங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
என்ன நடந்தது!
இவோன் ஃபோர்டு மொராக்கோ சென்றபோது தான் நாய்க் குட்டி நகம் பட்டுள்ளது. இங்கிலாந்து திரும்பிய பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். இது குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தி வருவதாகப் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரேபிஸ் நோய் என்றால் என்ன!
ரேபிஸ் என்பது ஒரு கொடிய வைரஸ் ஆகும்.. ரேபிஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூலமே மனிதர்களுக்குப் பரவுகிறது. வனவிலங்குகள் கடித்தால் அல்லது அதன் நகம் பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே முதலில் தோன்றும் என்றாலும் சில நாட்களில் உயிரிழப்பும் கூட ஏற்படும்.
முதலில் கடித்த அல்லது கீறிய இடத்தில் உணர்வின்மை ஏற்படும். பிறகு இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்யும் hallucinations கூட ஏற்படும். பதட்டம் அதிகரிக்கும். சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் கூட முடியாது. அவ்வளவு ஏன் சுவாசிப்பதில் கூட சிரமம் ஏற்படும். சிலருக்குப் பக்கவாதம் கூட ஏற்பட்டுள்ளது. பொதுவாக இதன் அறிகுறிகள் 12 வாரங்கள் வரை இருக்கும்.
பல மாதங்களுக்கு பிறகும் தாக்கும்
ரேபிஸ் நமது உடலில் புகுந்தால் உடனடியாக அறிகுறிகள் தோன்றும் எனச் சொல்ல முடியாது. அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்க சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை கூட ஆகலாம். ஃபோர்டுக்கு கூட கடந்த பிப்ரவரி மாதம் அவரை நாய்க் குட்டி கீறியுள்ளது. ஆனால், மே இறுதியில் தான் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. எனவே, உரியத் தடுப்பூசி போடப்படாத விலங்குகள் உங்களைக் கடித்தால் அல்லது கீறினால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.












Click it and Unblock the Notifications