ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு.. சகோதரியின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர் .. உத்தரபிரதேசத்தில் அவலம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களை எடுத்து செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனது சகோதரியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர் ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியில் இளம்பெண் ஒருவர் வீட்டில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார். இதை பார்த்து ஷாக்கான இப்பெண்ணின் தம்பி, அக்காவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பாத சகோதரன் தனது அக்காவை அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்கையில் ஆம்புலன்ஸை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருக்கவில்லை. எனவே அக்காவை பைக்கில் வைத்தே மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை இல்லாதது, அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலைமையை எடுத்து காட்டுகிறது என்று விமர்சித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்த மாநிலத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. ரிக்ஷா வண்டியிலும், பைக்கிலும் சடலங்களை எடுத்துச்செல்லும் அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்கிற திட்டத்தை யோகி ஆதித்யநாத் செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கூட இல்லாது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உரிய ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் தினமும் குறிப்பிட்ட அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
தற்போது அவுரியில் நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அதற் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications