காலநிலை பற்றி கவலையில்லை.. அரிசி உற்பத்தியில் முழு கவனம் செலுத்தும் உ.பி அரசு! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: காலநிலைகள் சவாலாக இருந்தாலும் இந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் சாதித்துக்காட்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாடு முழுவதும் ஏற்படும் உணவு பற்றாக்குறையை தவிர்க்க மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் உபரியாக விளையும் அரிசியை கொள்முதல் செய்து இந்திய உணவு கழகம் மூலம் தேவை இருக்கும் இடத்திற்கு விநியோகம் செய்யும். இந்த நடைமுறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு அரிசி உத்தரப் பிரதேசம் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அரிசி விநியோகத்தில் தொடர் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது புதிய தொழில்நுட்பத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிர்ணயித்த அளவைவிட அதிகமான அளவு அரிசி கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. அதாவது மத்திய அரசுக்கு அரிசி போக வேண்டும் எனில் முதலில் மாநிலத்தில் உள்ள ஆலைகளுக்கு நெல் போக வேண்டும். இந்த ஆலைகள் நெல்லை அரிசியாக மாற்றி அனுப்பி வைப்பார்கள்.
இதற்கு முன்னர் இந்த நடைமுறை மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இது ஒரு சாஃப்ட்வேர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாஃப்ட்வேர் மாநிலம் மூலம் 1800 அரிசி ஆலைகளுக்கு நெல் பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது. இது முந்தைய நடைமுறையை விட வேகமானதாக இருக்கிறது. மட்டுமல்லாது அரிசியை ஆலைகளுக்கு பிரித்து வழங்க சாஃப்ட்வேரை பயன்படுத்திய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது.
சில ஆலை உரிமையாளர்கள் தங்களுக்கு கூடுதல் நெல் வேண்டும் என்று லஞ்சம் கொடுத்து வந்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட ஆலைக்கு மட்டும் கூடுதல் நெல் சென்றுக்கொண்டிருந்தது. மற்ற ஆலைகள் வெறிச்சோடியிருந்தன. இதன் மூலம் ஊழல் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் அரிசி உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. நாம் மத்திய அரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தாமதமாக அரிசி வழங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு இழப்பு ஏற்படும்.
தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. எதிர்பார்த்ததைவிட இதன் மூலம் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும். அரசுக்கு கோடிக்கணக்கில் இத்தொழில்நுட்பம் மூலம் நிதி சேமிக்கப்படும். இதன் காரணமாக மோசமான காலநிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications