உ.பி-இல் திருடப்பட்ட குழந்தை.. பாஜக பிரமுகர் வீட்டில் கண்டுபிடிப்பு! கடத்தல் கும்பலும் சிக்கியது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 7 மாத குழந்தை ரயில்வே நிலையத்தில் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் குழந்தை கடத்தல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

குழந்தை திருட்டு
கடந்த வாரம் மதுரா ரயில் நிலையத்தில் தம்பதி தங்கள் ஏழு மாத குழந்தை உடன் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது இரவு நேரத்தில் யாரும் கவனிக்காத போது, தூங்கிக் கொண்டு இருந்த ஏழு மாத ஆண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றார். கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் தங்கள் குழந்தை காணாமல் போனதை உணர்ந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் குழந்தையைத் தேடி உள்ளனர்.

பாஜக பிரமுகர்
எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், அந்த குழந்தை மதுரா ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் பாஜக பிரமுகர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளைத் திருடி விற்கும் கும்பலை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

மருத்துவர்கள்
பாஜகவைச் சேர்ந்த வினிதா அகர்வாலும் அவரது கணவரும் இரண்டு மருத்துவர்களிடம் இருந்து ₹ 1.8 லட்சத்துக்கு இந்த ஆண் குழந்தையை வாங்கி உள்ளனர். அந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகப் பணம் கொடுத்து வாங்கி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் குழந்தையை விற்ற அந்த இரு மருத்துவர்கள் குழந்தைகளைத் திருடி விற்கும் பெரிய கேங் உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

ஒப்படைப்பு
இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிளாட்பாரத்தில் அமைதியாகத் தாயாருடன் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையைத் தூக்கிச் சென்ற அந்த நபரும் கைது செய்யப்பட்டு உள்ளார். பாஜக பிரமுகர் வீட்டில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிய மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த இரு டாக்டர்களிடம் இருந்தும் கட்டுக்கட்டாக பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் கும்பல்
இந்தச் சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி முகமது முஷ்டாக் கூறுகையில், "பணத்திற்காக மட்டுமே இந்த கும்பல் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு உள்ளது. குழந்தையை பிளாட்பாராத்தில் இருந்து தூக்கிச் சென்ற தீப் குமார் என்ற நபரை முதலில் கண்டறிந்தோம். அவர் ஹத்ராஸ் மாவட்டத்தில் மருத்துவமனையை நடத்தும் இரண்டு டாக்டர்களை கொண்ட கடத்தல் கும்பலைக் கும்பலைச் சேர்ந்தவர். அவர் மட்டுமின்றி வேறு சில சுகாதார ஊழியர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக பிரமுகர்
குழந்தை யாருடைய வீட்டில் கண்டறியப்பட்டதோ, அவர்களிடமும் நாங்கள் விசாரித்தோம். கண்டுபிடிக்கப்பட்டது, அவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருப்பதாகவும், அதனால் ஒரு மகன் வேண்டும் என்று இதைச் செய்ததாக அவர்கள் எங்களிடம் கூறினார்கள்" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகரிடம் இருந்து எவ்வித விளக்கமும் இல்லை.

நடந்தது என்ன
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் அரங்கேறியது. அன்றைய தினம் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு நபர் பார்த்துக் கொண்டே செல்கிறார். அதன் பின்னர் சில நிமிடங்களில் அவர் மீண்டும் வந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறார். பிளாட்பாரத்தில் கிளம்ப இருந்த ரயிலை நோக்கி அவர் ஓடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்தே போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.












Click it and Unblock the Notifications