இந்தியாவில் வெடிகுண்டு வைக்க சதி.. 8 ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான விசாரணையில்.. என்ஐஏ கோர்ட் அதிரடி
ஏடிஎஸ் படை அதிகாரிகள் அங்குச் சென்ற போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், ஏடிஎஸ் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சைஃபுல்லா என்பவர் கொல்லப்பட்டார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 8 ஐஎஸ் தீவிரவாதிகளைக் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை துப்பு துலக்கிய போது இந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ம.பி. ரயில் குண்டுவெடிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உஜ்ஜைன் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் நடத்திய விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
அப்போது, கான்பூர் நகர் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ஏடிஎஸ் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஏடிஎஸ் படை அதிகாரிகள் அங்கு சென்ற போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், ஏடிஎஸ் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சைஃபுல்லா என்பவர் கொல்லப்பட்டார். முகமது ஃபைசல் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள், வெளிநாட்டுப் பணம், போலி பாஸ்போர்ட்டுகள், சாட்டிலைட் செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஐஎஸ் அமைப்பின் கொடிகள் மற்றும் அது தொடர்பான புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.

8 பேர் கைது
இதையடுத்து, முகமது ஃபைசலிடம் ஏடிஎஸ் படையினர் நடத்திய விசாரணையில், மத்தியப் பிரதேச ரயிலுக்குக் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டான். மேலும், உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கச் சதித்திட்டம் தீட்டியதையும் அவன் ஒப்புக்கொண்டான். பின்னர் என்ஐஏ அமைப்புக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அடீஃப் முசாஃபர், முகமது டேனிஷ், ஆசிப் இக்பால், சையது மீர் ஹுசேன், அடீஃப் இராக்கி உள்ளிட்ட 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

குற்றவாளி என அறிவிப்பு
இந்த 8 பேர் மீது 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்ஐஏ அதிகாரிகள், லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு, மத்தியப் பிரதேச ரயில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது, உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டியது போன்றவற்றை ஆதாரங்களுடன் பதிவு செய்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் வாத, பிரதி வாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இதையடுத்து, நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 8 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications