‛‛அடுத்த விக்கெட்’’.. ‛இந்தியா’ கூட்டணிக்கு விழும் இன்னொரு அடி.. பாஜக கூட்டணியில் இணையும் ஆர்எல்டி?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள ஆர்எல்டி கட்சி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகவும், நிதிஷ் குமாரை தொடர்ந்து விரைவில் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் இருந்து இப்போது பீகார் முதல்வரும், ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் வெளியேறி உள்ளார்.

நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ கட்சியின் கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. உண்மையில் நிதிஷ் குமாரின் இந்த வெளியேற்றம் என்பது ‛இந்தியா' கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் தான் ‛இந்தியா' கூட்டணியில் தான் இருக்கிறேன். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து தான் போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளா். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதோடு இதுவும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள மனக்கசப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்நிலையில் தான் நிதிஷ் குமாரை போல்‛இந்தியா' கூட்டணியில் இருந்து இன்னொரு கட்சி வெளியேறி பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆர்எல்டி எனும் ராஷ்ட்ரிய லோக் தளம் என்ற கட்சி தற்போது ‛இந்தியா' கூட்டணியில் உள்ளது. இந்த கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த பேச்சுவார்த்தை என்பது நேற்று டெல்லியில் ரகசியமாக நடந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாஜக சார்பில் ஆர்எல்டி கட்சிக்கு உத்தர பிரதேசத்தில் மொத்தம் 4 நாடாளுமன்ற தொகுதிகளை வழங்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம் கைராணா, பாக்பட், மதுரா மற்றும் அம்ரோஹா ஆகிய 4 தொகுதிகளை ஆர்எல்டி கட்சி வழங்குவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போதைய சூழலில் உத்தர பிரதேச மாநிலத்தில் ‛இந்தியா' கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், ஆர்எல்டி கட்சிகள் உள்ளன. மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அகிலேஷ் யாதவ் வெறும் 11 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி உள்ளார். ஆர்எல்டி கட்சிக்கு 7 தொகுதிகளை வழங்குவதாக அகிலேஷ் யாதவ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் முசாபர்நகர், பிஜ்னூர், கைராணா ஆகிய 3 தொகுதிகளை ஆர்எல்டி கேட்டதற்கு சமாஜ்வாதி கொடுக்க மறுத்துள்ளது. அந்த 3 தொகுதிகளிலும் ஆர்எல்டி கட்சி சின்னத்தில் சமாஜ்வாதி வேட்பாளர்களை களமிறக்க அகிலேஷ் யாதவ் விரும்பினார். ஆனால் அதற்கு ஆர்எல்டி கட்சி உடன்படவில்லை. இதையடுத்து இருகட்சிகள் இடையேயான சீட் பகிர்வில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதில் ஆர்எல்டி கட்சி அதிருப்தியடைந்துள்ளது. மேலும் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என ஆர்எல்டி நினைக்கிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணியை விட பாஜக கூட்டணி சிறந்ததாக இருக்கும் என்ற நோக்கத்தில் அந்த கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‛இந்தியா' கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்துள்ளார். அந்த வரிசையில் ஆர்எல்டி கட்சியும் பாஜகவில் இணைந்தால் அது ‛இந்தியா' கூட்டணிக்கு இன்னொரு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஏனென்றால் உத்தர பிரதேச மாநிலத்தில் சில குறிப்பிட்ட தொகுதி மற்றும் பிராந்தியங்களில் ஆர்எல்டி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. தொடக்கத்தில் பாஜகவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த ஆர்எல்டி தற்போது சமாஜ்வாதி கூட்டணியில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணியில் 33 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆர்எல்டி கட்சி பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சமாஜ்வாதி கட்சியின் ஷிவ்பால் சிங் யாதவ் கூறுகையில், ‛‛ஆர்எல்டி கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. அந்த கட்சி எங்களுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும். பாஜக தற்போது போலியான தகவல்களை பரப்புகிறது. நாங்களும், ஆர்எல்டி கட்சியும் இணைந்து பாஜகவை தோற்கடிப்போம்'' என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ‛இந்தியா' கூட்டணி சார்பில் சமாஜ்வாதி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வென்றார். மாறாக சமாஜ்வாதி கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் முனப்பில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதசத்தில் செயல்பட்டு வரும் நிலையில் ஆர்எல்டி கட்சி பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications