மக்கள் சேவையில் குறை இருக்கக் கூடாது.. அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: மக்களின் குறைகளுக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இதில் ஏதாவது அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக உத்தர பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி விரைவில் உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சுமார் 200 பேரிடம் புகார் மனுக்களை யோகி ஆதித்யநாத் வாங்கினார்.
பின்னர் அதிகாரிகளிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மக்களின் குறைகளுக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இதில் ஏதாவது அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய யோகி ஆதித்யநாத், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். யோகி ஆதித்யநாத்திடம் மனு அளித்தவர்களின் பெரும்பாலானவர்கள், தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உதவி அளிப்பதற்காகத்தான் அரசு உள்ளது எனவும் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications