இலக்கு இதுதான்.. ரூ.480 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து முழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், பல புதிய திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தேவரியா மாவட்டத்தில் ரூ.480 கோடி மதிப்பில் சுமார் 223 திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதுதான் எங்களின் நோக்கம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக கூறி வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது. தற்போது யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் ஆனதை மாநில அரசு கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை யோகி ஆதித்யநாத் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் யோகி இம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே இதை கொண்டாடுவதன் மூலம் மாநில அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இது பெரிய அளவில் உதவும் என்பதால் பாஜக இதனை தீவிரமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதிய நலத்திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தேவரியா மாவட்டத்தில் ரூ.480 கோடி மதிப்பில் சுமார் 223 திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் பின்னர் சிறப்புரையாற்றிய அவர், "கடந்த ஆட்சிக்காலத்தில் மாநிலம் முழுவதும் இருந்த சர்க்கரை ஆலைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர், அதாவது உத்தரப் பிரதேசம் ஒரு விவசாய பூமி. இன்னும் சரியாக சொல்வதெனில் இந்த மண்ணில் கரும்பு அபரிமிதமாக வளரும். அதை பயன்படுத்த தெரியாத அவர்கள் ஆலைகளை விற்றுவிட்டனர்.
ஆனால் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இந்த ஆலைகள் மீண்டும் இயங்க முயற்சி எடுத்துள்ளது. இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மறுபுறம் எத்தனால் உற்பத்தியும் அதிகரிக்கும். இனி வரும் காலங்களில் பெட்ரோலை மட்டும் இந்தியா நம்பியிருக்காது. எத்தனால் உற்பத்தியை அதிகரித்து பெட்ரோலுக்கு மாற்றான இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே எதிர்கால கட்டமைப்புக்கு இப்போதே உத்தரப் பிரதேசம் தயாராகி வருகிறது.
கடந்த ஆட்சியின் போது நான் எம்பியாக இருந்தேன். ஆனாலும் தேவரியா, குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் என்னை வந்து சந்திப்பார்கள். அவர்களின் பிரச்னை குறித்து கூறி அதற்கான தீர்வையும் கேட்டு செல்வார்கள். அதாவது கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்கள் மீது அவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை. தற்போது நான் முதலமைச்சரான பிறகு மாநிலம் முழுவதும் இருக்கும் தொழில் அதிபர்கள் என்னை சந்திக்க வருகின்றனர். இந்த எண்ணிக்கை நான் எம்பியாக இருந்ததைவிட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் மூலம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு அங்கம்தான் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி. நமது மாநிலத்திற்கு தற்போது வரை ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகள் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications