யோகியை திணற வைத்த 36 மணி நேரம்.. அடுத்தடுத்து 7 பேரை தூக்கிய அகிலேஷ்.. உ.பியில் எதிர்பாராத ட்விஸ்ட்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெறும் 36 மணி நேரத்தில் 7 எம்எல்ஏக்களை பாஜக இழந்துள்ளது. வடிவேல் சீட்டு கட்டு விளையாடும் காமெடியில் வரிசையாக கார்டுகளை இழப்பது போல யோகி ஆதித்யநாத் எம்எல்ஏக்களை இழந்து கொண்டு இருக்கிறார்.. உத்தர பிரதேசத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்?
உத்தர பிரதேசத்தில் என்னதான் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருந்தாலும் இந்த முறை போட்டி என்னவோ பாஜக vs அகிலேஷ் யாதவ் இடையில்தான். அதிலும் கடந்த 6 மாதத்தில் அகிலேஷ் யாதவ் சத்தமின்றி உத்தர பிரதேசத்தில் "rise" ஆகிக்கொண்டு இருக்கிறார்.
அதிலும் இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி சமாஜ் வாதிக்கு கடந்த 6 மாதத்தில் மட்டும் 60 இடங்கள் உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாத ஏபிபி சி வோட்டர் கணிப்புப்படி பாஜகவுக்கு 223-235 இடங்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 145-147 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

36 மணி நேரம்
இப்படிப்பட்ட நேரத்தில்தான் உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பாஜக தலைகள் சமாஜ் வாதி பக்கம் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று முதல்நாள் மாலை 5 பேர். நேற்று ஒருவர். இன்று காலை ஒருவர் என்று மொத்தம் 2 அமைச்சர்கள் உட்பட மொத்தமாக 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதிக்கு தாவி உள்ளனர், இதில் பெரும்பாலான தலைவர்கள் ஓபிசி தலைவர்கள். ஸ்வாமி பிரசாத் மவுரியா என்ற மூத்த அமைச்சர் மற்றும் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாத்பதி, பகவதி சாகர், வினய் சாக்யா ஆகிய எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து நேற்று முதல் நாள் சமாஜ்வாதியில் ஐக்கியம் ஆனார்கள்.

ஓபிசி தலைவர்கள்
இன்னொரு எம்எல்ஏ நேற்று சமாஜ்வாதியில் ஐக்கியம் ஆன நிலையில்தான் இன்று பாஜக எம்எல்ஏ முகேஷ் வெர்மா சமாஜ்வாதியில் இணைந்துள்ளார். 36 மணி நேரத்தில் விழுந்த 7வது விக்கெட் இது. தென்னாப்பிரிக்காவில் இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்ததை விட அதிக வேகத்தில் பாஜக விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முகேஷ் வெர்மா ஓபிசி பிரிவு தலைவர் ஆவார். பிறப்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்க, இஸ்லாமியர்கள், விவசாயிகள் ஆகியோரை பாஜக புறக்கணிப்பதாக கூறி அவர் வெளியேறி இருக்கிறார்.

ஓபிசி ஏன் முக்கியம்
ஓபிசி தலைவர்கள் வரிசையாக பாஜகவில் இருந்து வெளியேறி அகிலேஷ் பக்கம் செல்வது மிகப்பெரிய கேம் சேஞ்சராக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜகவிற்கு தலித், சிறுபான்மையினர் வாக்கு குறைவாக கிடைக்கும் என்பதால் அக்கட்சி ஓபிசி + ஓசி வாக்குகளை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் இப்போது ஓபிசி தலைவர்கள் வரிசையாக அகிலேஷ் பக்கம் செல்வதால் அந்த வாக்குகளை பாஜக இழக்கும் என்று கூறப்படுகிறது. ஓபிசி வாக்குகள்தான் கடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முடிவுகளை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் பிளான் எப்படி?
இதனால்தான் கடந்த முறை பாஜக ஓபிசி தலைவர்களை குறி வைத்து தேர்தல் திட்டங்களை வகுத்தது. பல இடைநிலை ஜாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பாஜக கடந்த முறை வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அகிலேஷ் யாதவ் அதற்கும் இடம் கொடுக்கவில்லை. அமித் ஷா பாணியில் இடைநிலை ஜாதி கட்சிகளுடன் அகிலேஷ் கூட்டணி வைக்க தொடங்கி உள்ளார். குட்டி குட்டி கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிறார். சுக்லாதேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற கட்சி ராஜ்பார் ஜாதியினர் இடையே ஆதிக்கம் கொண்டது ஆகும். அம்மாநிலத்தில் 2 சதவிகித மக்கள் மட்டுமே இந்த ஜாதியில் இருந்தாலும் 20 இடங்களில் இவர்கள் முடிவுகளை மாற்ற கூடியவர்கள்.

பெரிய சறுக்கல்
அதேபோல் மஹான் தல் என்ற மவுரியா ஜாதி கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி வைத்துள்ளார். 12-15 இடங்களில் இந்த கட்சி முடிவுகளை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் ஆர்எல்டி, அப்னா தல் போன்ற கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அகிலேஷ் பக்கம் வந்து கொண்டு இருக்கின்றன. இவர்களின் வருகையாலும், பாஜக ஓபிசி தலைவர்களின் வருகையாலும் அகிலேஷ் யாதவ் அங்கு தேர்தல் களத்தையே மாற்றி வருகிறார். இதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜகதான் இப்படி சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. அதே அஸ்திரத்தை தற்போது அகிலேஷ் யாதவ் கையில் எடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications