அந்த நடிகை போல் மாறணுமாம்... மனைவியை PETஆசிரியர் போட்ட விநோத உத்தரவு.. அலறிய புதுப்பெண்
லக்னோ: நடிகை நோரா ஃபதேஹி போல் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று கூறி திருமணமான உடனேயே புதுப்பெண்ணை அரசு உடற்கல்வி ஆசிரியர் தனது தாய் - தந்தையுடன் சேர்ந்து துன்புறுத்தியது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதை செய்யாவிட்டால் சில நாட்கள் உணவு வழங்காமல் இருந்ததோடு, வரதட்சணை கேட்டு துன்புறுத்திய சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள உஜ்வால் கிராமத்தை சேர்ந்தவர் சிவம். இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் ஷானு அல்லது ஷான்வி (வயது 26).

இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. ஷானுவின், குடும்பத்தினர் வரதட்சணை உள்பட மொத்தம் ரூ.76 லட்சம் வரை செலவிட்டுள்ளனர். குறிப்பாக ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்க நகை, ரூ.24 லட்சம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார், ரொக்கமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.
நடிகை போல் மாற உத்தரவு
திருமணமான புதிதில் சில நாட்கள் வரை கணவன் - மனைவி மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்தினர். அதன்பிறகு தான் அவர்களின் வாழ்க்கையில் பூகம்பம் வந்தது. கணவன் சிவமிற்கு நடிகை நோரா ஃபதேஹி என்றால் கொள்ளைப் பிரியம். அவரை போன்ற ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சிவம் - ஷானுவை கரம் பிடித்தார். இது அவரது மனதை உறுத்தி கொண்டு இருந்துள்ளது.
இதனால் சிவம் தனது மனைவி ஷானுவை நடிகை நோரா ஃபதேஹி போல் மாற வேண்டும் என்று கூறியுள்ளார். உடற்பயிற்சி செய்து உடலை ‛பிட்' ஆக வைத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடிகை நோரா ஃபதேஹி போல் ஸ்லிம்மாக மாற வேண்டும். ஏனென்றால் நடிகை நோரா ஃபதேஹி போல் மணப்பெண் எனக்கு கிடைத்து இருக்கும். ஆனால் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. இதனால் நீ உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உணவு வழங்காமல் துன்புறுத்தல்
இருப்பினும் ஷானுவும் முடிந்தவரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினார். ஆனால் ஷானுவால் 3 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதுபற்றி அறிந்த சிவம் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்யாததற்கு தண்டனை வழங்கி உள்ளார். அதன்படி 3 நாட்கள் வரை உணவு வழங்காமல் துன்புறுத்தி உள்ளார். மேலும் அவரை தாக்கி உள்ளார். இதனால் அவரது கரு கலைந்துள்ளது.
மேலும் சிவமின் தாயும் ஷானுவை வீட்டு வேலை செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஷானு ஓய்வெடுக்கும் போதெல்லாம் வீட்டில் ஏதாவது வேலை சொல்லி வந்துள்ளார். ஷானு அந்த வேலைகளை செய்தாலும் கூட கணவர் சிவம் உடன் நேரம் செலவிட அனுமதிப்பது இல்லை. எப்போதும் திட்டி வந்துள்ளார்.
பெட்ரூம் கதவை மூட அனுமதியில்லை
அதேபோல் ஷானு வீட்டில் தனியாக இருக்கும்போது அறை கதவை மூட அனுமதிக்கப்படவில்லை. சிவமின் தாயும், தந்தையும் எப்போது வேண்டுமானாலும் அவரது அறைக்குள் சென்று வந்துள்ளனர். இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர் துன்புறுத்தல் காரணமாக ஷானு போலீசில் புகார் செய்தார்.
அதில், "நான் சராசரி உயரம் மற்றும் அழகாக இருக்கிறேன். இருப்பினும் உடல் ஷேமிங்கிற்கு ஆளானேன். என் கணவர் மற்ற பெண்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெண்களின் ஆபாசமான வீடியோக்களை அதிகம் பார்க்கும் குணம் கொண்டவர். என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். இதற்கு மாமியார், மாமனாரும் உடந்தை.
போலீஸ் விசாரணை
நடிகை நோரா ஃபதாஹியின் உடல் அமைப்பை கொண்டு வர வேண்டும் என்று 3 மணிநேரம் வரை தினமும் உடற்பயிற்சி செய்யும்படி கூறி 3 நாட்கள் வரை உணவு வழங்காமல் துன்புறுத்தினர். பெட்ரூம் கதவை மூட அனுமதிப்பது இல்லை. என் தந்தையிடம் இருந்து நிலம், பணம், வாங்கி வரும்படி தொடர்ந்து வரதட்சணை கேட்கின்றனர்'' என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications