அயோத்தி நதிக்கரையில் மனைவிக்கு ரொமென்டிக் கிஸ்..! கணவரை கும்மி எடுத்த கலாசார காவலர்கள்! பரபர வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் குளித்துக் கொண்டிருந்த ஜோடி மீது கலாசார தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொது இடங்களில் ஜோடியாக இருக்கும் காதலர்களைப் பிடித்து, திருமணம் செய்து வைப்பது அல்லது ராக்கி கட்ட வைப்பது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கும்.
இவர்கள் தங்களை தாங்களே கலாசார காவலர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள். ஜோடிகளை பிடிக்கும் போது, அதை வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வார்கள்.

உத்தரப் பிரதேசம்
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆனால் என்ன இந்த முறை திருமணமான ஜோடிகளை பிடித்து அடித்துவிட்டார்கள். இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. சிலர் கலாசார காவலர்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் சிலர் கலாசார காவலர்களின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

முத்தம்
அப்படி என்ன தான் நடந்தது எனப் பார்க்கலாம்! உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி பகுதியில் உள்ள சரயு நதிக்கரையில் சிலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஆண் ஒருவர் தனது மனைவி உடன் குளித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த நபர் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்
இதையடுத்து அங்கே சுற்றி இருந்தவர்கள் அந்த நபரிடம் வந்து எதோ கேட்டுள்ளனர். பிறகு அப்படியே அந்த நபரை நதியில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு, தாக்கத் தொடங்கினர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அந்த சமயத்தில் அந்த கும்பலிடம் இருந்து தனது கணவரைக் காக்கத் தொடர்ந்து முயன்றார்.

அசிங்கம்
இருப்பினும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத கும்பல் அந்த தம்பதியை ஆற்றில் இருந்து வெளியே இழுத்துச் சென்றது. கும்பலில் இருந்த சிலர், "எங்கள் அயோத்தியில் இதுபோன்ற அசிங்கத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது. கங்கையின் ஏழு ஆறுகளில் சரயுவும் ஒன்று. இந்துக்கள் மத்தியில் இந்த நதி தூய்மையாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.

போலீஸ்
பொது இடத்தில் தம்பதி தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி போலீசாருக்கு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தம்பதியையும் அவர்களைத் தாக்கியது யார் என்பதையும் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications