உயிரை பறித்த சிக்கன்? மதுரை அருகே அதிக கோழிக்கறி சாப்பிட்ட தந்தை, மகள்.. அடுத்தடுத்து மரணம்
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அதிகமான சிக்கன் சாப்பிட்டதால் செரிமானம் ஏற்படாமல் பாதிக்கப்பட்டு தந்தை மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொறித்த இறைச்சியை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது,சில நேரங்களில் புட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.சிக்கன் தான் பல நேரங்களில் பாய்சனாக மாறுகிறது. சிக்கன் ரைஸ், சிக்கன் 65, சிக்கன் நூடூல்ஸ் போன்றவை இன்றைய இளைஞர்களின் விருப்ப உணவாக உள்ளது. ஆனால் கெட்டுப்போன சிக்கனை கொண்டு சில நேரங்களில் உணவகங்களில் சமைப்பதால் பேராபத்து ஏற்படுகிறது.

சில நாட்கள் பிரிட்ஜில் வைத்து மாமிச உணவுகளை சமைப்பதும் நடக்கிறது. இதனால் அடிக்கடி பலர் உடல் நலன் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அதிகமான கோழிகறி சாப்பிட்டதால் செரிமானம் ஏற்படாமல் பாதிக்கப்பட்டு தந்தை மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பெரிய பொக்கம்பட்டியை சேர்ந்த கௌதம் ஆனந்த் பவித்ரா தம்பதிக்கு மிதுஸ்ரீ(வயது 4) என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கௌதம் ஆனந்த் சிக்கன் சாப்பிட்டுள்ளார். அவரது மகள் மிதுஸ்ரீக்கும் மனைவி பவித்ராவுக்கும் வாங்கி கொடுத்துள்ளார். மனைவி குழந்தையுடன் கோழிக்கறி சாப்பிட்டு இரவு கௌதம் ஆனந்த் தூங்கி இருக்கிறார்.
இந்நிலையில் காலையில் திடீரென சிறுமி மிதுஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கௌதம் ஆனந்த், மதுரை அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்தில் கௌதம் ஆனந்திற்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்,
இந்தநிலையில் மிதுஸ்ரீ, கவுதம் ஆனந்த் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். கோழிக்கறி சாப்பிட்டு விட்டு தூங்கிய கணவனையும் மகளையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த பவித்ரா, சிந்துபட்டி போலீசாரில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் தந்தை, மகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் மிதுஸ்ரீ, கவுதம் ஆனந்த் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளில் கோழிக்கறியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருந்ததும், இதனால் மிதிஸ்ரீ செரிமானம் ஏற்படாமல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது. இதனிடையே மகள் இறந்த துக்கம் மற்றும் அதிகமாக கோழிக்கறியை உட்கொண்டு இருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு கௌதம் ஆனந்த் உயிரிழந்ததாக அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து போலீசார் அந்த அறிக்கையை வைத்து விசாரித்து வருகிறார்கள். கோழிக்கறி சாப்பிட்ட தந்தை மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மதுரை திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications