மதுரையில் கழிவறையை உடைத்து கையோடு எடுத்து சென்ற களவாணிகள்.. திறக்க வந்த பிடிஆருக்கு பெரிய ட்விஸ்ட்
மதுரை: மதுரையில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையை திறக்க வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அங்கிருந்த கழிப்பறைகளின் நிலையை கண்டு ஆடிப்போனார். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிடிஆர் தனது தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில், பள்ளிக் கட்டிடம் கட்டுவது, ரேஷன் கடை கட்டுவது, சாலை அமைப்பது, பாலம் கட்டுவது, சாக்கடைகள் அமைப்பது உள்பட பல்வேறு பணிகளை செய்ய உத்தரவிட்டு வருகிறார். அதன்படியே, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகளுடன் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பிடிஆர் செய்து வருகிறார்.

அப்படித்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி மண்டலம் 3ல், 52வது வார்டுக்கு உள்பட்ட தெற்கு சித்திரை வீதியில் ரூ.10 லட்சத்தில் கழிப்பறை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள இந்த கழிப்பறைகளை நேற்று திறந்து வைத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உள்ளே சென்று ஆய்வு செய்த போது, கழிவறைகளில் இருந்த குழாய்கள் சில உடைக்கப்பட்டு இருந்தன. சில குழாய்கள் காணாமல் போய் இருந்தன.
இதை பார்த்து திடுக்கிட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எப்படி நடந்தது என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அவர்கள், சித்திரை திருவிழாவின் போது சிலர் இப்படி மொத்தமாக பெயர்த்து எடுத்து திருடி சென்றுவிட்டதாக கூறினார். இதையடுத்து உடனடியாக கழிவறைகளில் குழாய்களை பொறுத்தி சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு பிடிஆர் உத்தரவிட்டார்.
பொதுவாக அரசு சார்பில் கட்டப்படும் கழிவறைகளை சில சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்துவது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டால், அந்த சாலைகளை பெயர்த்து எடுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள். இதேபோல் சாக்கடை கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டதுமே அதையுமே சிலர் சேதப்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவே நீண்ட நாள் இருக்க வேண்டிய சாலைகள், கழிவறைகள் வீணாகும் நிலை ஏற்படுகிறது. அரசு இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications