ஆணாக மாறி ஷேர் ஆட்டோ ஓட்டும் பெண்.. 8 வருட காதல் போராட்டத்திற்குப் பின் நடந்த திருமணம்
மதுரை: பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்த ஒருவர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆணாக மாறி மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த அமரன் பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு தனக்கு ஆண் தன்மைதான் அதிகம் இருப்பதை உணர்ந்துள்ளார். அந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2021இல் முழுமையாக ஆண் தோற்றத்திற்கு மாறியுள்ளார். வீட்டில் அதற்கு மேல் அவரை ஏற்பார்களா என்பதில் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி இப்போது ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி போகும் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தனது வாழ்க்கை போராட்டம் குறித்து ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ள அமரன், "எப்போது முழுமையாக ஆண் உணர்வு ஏற்பட்டது என்பதை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. சின்ன வயது முதல் அப்படியான மனநிலை இருந்துள்ளது. என் வீடு பெரிய கூட்டுக் குடும்பம். ஆகவே உடனடியாக என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் மற்றும் பயம் இருந்தது.
ஒரு கட்டத்திற்குப் பின் வீட்டில் திருமணம் செய்ய நினைக்கும்போது அப்போது என்னால் வெளிப்படையாகக் காரணத்தைச் சொல்ல முடியவில்லை. நான் பெண் இல்லை. ஆணாக உணர்கிறேன் என்பதை வீட்டில் எப்படிச் சொல்ல முடியும். கல்யாணத்திற்குக் கட்டாயப்படுத்தும் போது வேண்டாம் என்றேன். ஏன் என அடுத்து கேள்வி எழுந்தது. யாரையாவது காதலிக்கிறேனா எனக் கேட்க தொடங்கினார்கள். அப்போது நான் பெண்ணைத்தான் விரும்புகிறேன் என்பதை எப்படிச் சொல்வது?
வெளிப்படையாகச் சொல்லப்போனால், ஏரியாவில் ஆண் பிள்ளையைப் போலத்தான் லந்து பண்ணிக் கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் வயதுக்கு வந்த பிறகு வீட்டில் அடங்கி நடக்க வேண்டிய சூழல் வந்தது" என்கிற அமரன் தலையை ஆண் போலவே கட்டிங் செய்து கொண்டு அதில் மூன்று கோடுகள் கூட போட்டுள்ளார். "என் வீட்டுக்குத்தான் நான் மாறியது அதிர்ச்சியாக இருந்தது. என் பள்ளித் தோழிகள் அனைவருக்கும் அதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது சின்ன வயதிலேயே அப்படித்தானே? என்று நினைப்பார்கள். வெளியில் உள்ளவர்கள் நான் ஆண் தன்மையோடு இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டார்கள். வீட்டிற்கு வரும்போதுதான் நான் பெண் போல பல காலம் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது" என்கிறார்.
இப்போதுகூட மதுரை வட்டாரத்தில் தன்னுடன் சேர்ந்து படித்தவர்கள் யாரையேனும் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தால் பயந்து மறைந்து கொள்வேன் எனச் சொல்லும் இவர், தனது தோழிகள் திருமணமாகி கணவருடன் வரும் போது என்ன சொல்லி அறிமுகப்படுத்த முடியும்? ஆண் பெயரை சொல்வதா? பழைய பெண் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்வதா? என்ற தர்மசங்கடம் கொடுக்காமல் ஒதுங்கிக்கொள்வது நல்லது இல்லையா? என்கிறார் இயல்பாக மனதில் பல கவலைகளை மறைத்துக் கொண்டு.

"2022இல் எனக்குத் திருமணம் நடந்தது. அதனால் சென்னைக்கு வேலை தேடிப்போய்விட்டேன். எனக்கு முதலில் பெண்ணாக உள்ள ஒருவர் ஆணாக மாறும் உணர்வு வரும் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு சென்னை போன பிறகுதான் எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது. அங்கு வேலை பார்க்கும்போது சாலை விபத்து நடந்தது. மீண்டும் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் மனைவியை மதுரைக்கு அழைத்து வந்து தனியாக வீடு எடுத்துத் தங்கி ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்" என்கிறார் அமரன்.
இவரது மனைவியை 8 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். இப்போது ஒருவரின் உதவியில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த வருமானத்தை வைத்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவருவதாகக் குறிப்பிடும் அமரன், தன்னை நேரடியாகப் பார்த்து விசாரிக்கும் நபர்களைவிட சாடைமாடையாக தன்னை விமர்சிக்கும் சக ஆட்டோ ஓட்டுநர்களை நினைக்கையில் தான் மனம் வலிக்கிறது என்று சொல்லும் இவர் அப்படியான ஆட்களை நேரடியாகக் களத்தில் இறங்கி சட்டை காலரைப் பிடித்து சண்டை செய்தால் மனம் ஆறுதல் அடையும் என்கிறார்.












Click it and Unblock the Notifications