இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கோ அங்கே தான்.. நடிகர் வையாபுரி சொன்ன விஷயம்
மதுரை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் வையாபுரி இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அவர்களுக்காக தான் பிரச்சாரம் செய்வேன் என்று கூறினார். மேலும் கரூர் கூட்ட நெரிசல் குறித்தும் நடிகர் வையாபுரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் வையாபுரி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டங்கள் வந்ததற்கு காரணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தரப்பிலும் ஒரு விஷயம் இருக்கிறது. நடிகர் என்றால் அவரைப் பார்ப்பதற்கு கூட்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால் எதிர்பாராமல் இது நடந்துவிட்டது. அவரும் கூட அதிக முறை இதை சொல்லியிருக்கார், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது, கர்ப்பிணிகள் வரக்கூடாது என பலமுறை கூறியிருக்கிறார்.
அதையும் மீறி ஆசையில் பார்க்க வருகிறார்கள். நடந்திருக்கக் கூடாது. எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. இதற்கு நிறைய பேர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். நானும் என்னுடைய சார்பில் வருத்தம்தான் தெரிவிக்க முடியுமே தவிர, இதற்காக நான் ஏதும் விளக்கம் தர முடியாது. அந்த அளவுக்கு எனக்கு தகுதியும் கிடையாது.
பொதுவாகவே யாருமே யாரையுமே கார்னர் பண்ண முடியாது. ஏனென்றால் அவங்க அவங்களுக்கு என ஒரு வட்டம் இருக்கும். அவங்களுக்கு என ரசிகர் இருக்காங்க.. அவங்களுக்கு என ஒரு கூட்டம் இருக்கு. நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். நல்ல நண்பர். மனம் விட்டு பேசியிருக்கோம். இவர் மட்டும்.. அவர் மட்டும் என்று எல்லாம் கிடையாது.. இருவருமே என்னுடைய இரு கண்கள் மாதிரி தான். ஒன்று ஏகே.. ஒன்று விஜய்.. இருவருடனும் கூட நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன்.
இதுவரைக்கும் கமல் சாரும் நானும் நிறைய படங்கள் பண்ணியிருக்கோம். என்னையும் பலமுறை பாராட்டியிருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவர் கட்சி ஆரம்பித்தபோது கூட என் கட்சிக்கு வா என்று அழைத்தது கிடையாது. கேப்டனுடனும் நான் நிறைய படம் பண்ணியிருக்கிறேன். அவரும் அப்படித்தான், வா வையாபுரி பிரச்சாரத்துக்கு வாங்க என கூப்பிட்டது கிடையாது. யாரும் யாரையும் கூப்பிட மாட்டாங்க.. விரும்பி சென்றால் உண்டு.
ஜெயலலிதா என் திருமணத்துக்கு இரண்டு குத்துவிளக்கு கொடுத்தாங்க.. அது இப்போது வரைக்கும் என் வீட்டில் வெளிச்சம் வீசி வருகிறது. நான் அன்னைக்கு சொன்ன ஒரு விஷயம்தான்.. இப்போதும் சொல்கிறேன்.. இரட்டை இலை எங்கே இருக்கோ அவர்களுக்குத்தான் ஓட்டு கேட்டு போவேன்.. இதுவரை எங்கேயும் மாறியது இல்லை.. இனிமேலும் மாறப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications