கலகலக்க வைக்கும் கப்பலூர் டோல்கேட்.. சொன்னீங்களே செஞ்சீங்களா ஸ்டாலின்? ஆர்பி உதயகுமார் அட்டாக்!
மதுரை: கப்பலூர் டோல்கேட்டை இடமாற்றம் செய்து நிரந்திர தீர்வு காண கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போராட்டக் குழுவினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் டோல்கோட் மூடப்படும் என்ற முதலமைச்சரின் வாக்குறுதி என்னாச்சு? என ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்போது சுமார் 8:00 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து பழைய முறையிலே உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 15ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கப்பலூர் டோல்கேட்டை இடமாற்றம் செய்து நிரந்தரமாக தீர்வு காண கோரி திருமங்கலம் தொகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து பல கட்ட வார்த்தையில் நடைபெற்றதில் தோல்வி அடைந்ததில் கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதனையடுத்து 30ஆம் தேதியான இன்று முழு கடையடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து டோல்கேட்டை கடந்து செல்லலாம் என அமைச்சர் மூர்த்தி அவர்கள் தெரிவித்து இருந்த போதிலும் திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என நேற்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டக் குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் கப்பலூர் டோல்கேட்க்கு வந்த ஆர்பி உதயகுமார்
பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க வேண்டும் அனுமதி தாருங்கள் என்று கேட்ட பொழுது, அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து காவல்துறையிடம் கடுமையான வாக்குவாதத்திற்கு பின்பு , மனு கொடுக்க வந்த அப்பகுதிக்கு பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது கடந்த சட்டமன்றத் தேர்தலில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் . தற்போது மூன்று ஆண்டுகள் அகற்றப்படவில்லை எனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உண்ணாவிரதம் இருக்கிறோம் என ஆர்பி உதயகுமார் கூற அவர்களை காவல்துறையினர் கைது செய்து மேல கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மண்டபத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் உதயகுமார் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார்," தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தற்போது 2021 ஆண்டிலிருந்து விதிமுறை தளர்த்தப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு மக்களை கசக்கி பிழிகிறது.
போராடினால் மக்கள் மீது அடக்குமுறை ஏவுகிறது மேலும் சுங்கச்சாவடி அபதார கட்டண நோட்டீஸ் விடப்பட்டு இரண்டு லட்சம் முதல், 20 இலட்சம் வரை அபதார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலூர் டோல்கேட் விதிமுறைக்கு மீறி அமைக்கப்பட்டதால் அதை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம். தற்பொழுது டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை நான் 22 மனுக்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன் ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை.
தற்போது கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் மக்களிடத்தில் மனுக்களை வாங்க சென்றபோது காவல்துறை மக்களை கைது செய்கின்றனர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களையும் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார். அவர் கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக அறவழியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களை கைது செய்துள்ளனர். எத்தனை அடக்குமுறையை அரசு செய்தாலும் மக்களுக்காக போராடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications